குழந்தை பாக்கியம் தரும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் – சிம்மக்குளத்தின் சிறப்புகள்!

வேலூர் விரிஞ்சிபுரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பிரசித்திமிக்க மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. கோயிலின் மதில் சுவரும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. தஞ்சைக் கோயிலின் அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் விரிஞ்சிபுரம் கோயில் மதில் சுவரின் சிறப்பை அறியலாம். இக்கோயிலுக்குள் அமையப் பெற்றுள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விசேஷமானது. சிம்ம தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில்

பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு, திருமண வரம் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டுவரும் நம்பிக்கை. சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.

வெகுசிறப்பு வாய்ந்த விரிஞ்சிபுரம் கோயிலில், இந்த ஆண்டு ‘கார்த்திகை கடைஞாயிறு விழா’ இன்று நள்ளிரவு தொடங்குகிறது. நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறக்கப்படும். தொடர்ந்து, நாளைக் காலை பிரம்மக் குளத்தில் தீர்த்தவாரி, பாலகனுக்கு உபநயன சிவதீட்சை, அதன்பிறகு திருமாட வீதி உலாக்கள் சிறப்பாக நடைபெற உள்ளன. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சிம்மக் குளத்தில் நீராடுவார்கள் என்பதால் கடைஞாயிறு விழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் சிறப்பாகச் செய்துவருகிறது.

சிம்மக்குளம்

அதோடு, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 15 சிறப்புப் பேருந்துகளும் விரிஞ்சிபுரத்துக்கு இயக்கப்படுகின்றன. குடியாத்தம் பகுதியில் இருந்தும் 5 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று மதியம் 2 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரையிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைஞாயிறு விழா நடத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகவும் வருவாய்த்துறையினர் அடங்கிய கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.