கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலியாகினர். இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அதன்படி சி.பி.ஐ சமர்ப்பித்த அறிக்கையில், காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மட்டும் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டது இருந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், ‘சி.பி.ஐ-யின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்.
கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக் காரணமான மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் வருவாய் அலுவலர், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் மனு சி.பி.ஐ தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பசும்பொன் சண்முகையா, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு படுகொலை வழக்கில், ஒரு காவல்துறை ஆய்வாளர் மட்டுமே குற்றவாளி என சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் மீண்டும் புலன்விசாரணை செய்து ஆறு மாதத்திற்குள் புதிய இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது. முன்னதாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், ‘இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல்துறை தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட17 பேர் மீது நடவடிகை எடுக்க வேண்டும்’ என பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் சி.பி.ஐ சொதப்பியது எங்கே? என்கிற கேள்வியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் எழுப்பினோம். “இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என நாங்கள்தான் கேட்டோம். அவர்கள் எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை. மாநில காவல்துறை பதிவு செய்த எப்ஃ.ஐ.ஆர்யையே, அவர்களும் வைத்திருந்தார்கள். இதையடுத்து, ‘புதிதாக தொடர்புடைய அனைவரின் பெயரையும் சேர்த்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்’ என சட்ட போராட்டம் நடத்தினோம்.
அதன்பிறகுதான் அதற்கான உத்தரவு பிறப்பித்தது, நீதிமன்றம். ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்டெர்லைட்டுக்கும், அன்று இருந்த அரசுக்கும் ஆதரவாகவே, சி.பி.ஐ செயல்பட்டது. மாநில காவல்துறையை விட மோசமாக செயல்பட்டார்கள். அப்போது, ‘ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்கிறோம்’ என நீதிமன்றத்தில் கூறினார்கள். அதன்படி தாக்கல் செய்த அறிக்கையில், ‘காவல் ஆய்வாளர் திருமலை மட்டுமே குற்றவாளி’ என அப்போதைய மாநில அரசு கூறியதையே தெரிவிக்கப்பட்டது. ஒருவர் மட்டுமே எப்படி இதற்கு காரணமாக இருக்க முடியும்?.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறதா?. அவர் சொன்னவுடன் மக்களை குருவியை சுடுவது போல சுட்டு விடுவார்களா?. 15 பேர் இறந்ததை மட்டுமே அனைவரும் பார்க்கிறார்கள். 200 பேர் படுகாயம் அடைந்ததை பார்க்கவில்லை. எனவேதான், ‘இந்த அறிக்கை மாநில காவல்துறையின் அறிக்கை போலவே இருக்கிறது. மீண்டும் விசாரணை நடத்தி புதிய அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும்’ என நீதிமன்றத்தை நாடினோம். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ‘மீண்டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறது.
இது அநீதிக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டும் என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இந்த அமைப்புகள் என்னதான் செய்கிறது?. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தோம், கைது செய்தோம் என இயற்கையாகவே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக்கூட அவர்கள் எடுப்பதில்லை. அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீதும் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அறிக்கையே நீதி விசாரணைதான். புலன் விசாரணை மேற்கொள்ளவில்லை. அவர்களால் அதை செய்வது மிகவும் கடினம்.
அப்படி இருந்தும் அந்த ஆணையம் அதிகாரிகள் பலர் தவறு செய்திருப்பதாக கூறுகிறது. ஆனால் புலன் விசாரணை செய்ய வேண்டிய சி.பி.ஐ கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. பிறகு எதற்கு சி.பி.ஐ இருக்கிறது?. எந்த தவறு செய்தாலும் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்ற மனப்போக்கில்தான் இருக்கிறார்கள். இதில் சி.பி.ஐ மிகவும் மோசமாக நடந்துகொள்கிறது. நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை தட்டி கேட்க மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
வாச்சாத்தி வன்முறையில் 32 ஆண்டுகள் நாங்கள் கடுமையான போராட்டம் நடத்திய பிறகே தீர்ப்பு வந்திருக்கிறது. இதுபோல் ஒவ்வொரு வழக்குக்கும் 32 ஆண்டுகள் போராட வேண்டும் என்றால், பிறகு எதற்கு இந்த அமைப்புகள் இருக்கின்றன?. தற்போதைய நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சி.பி.ஐ எப்படி விசாரித்து அறிக்கை சமர்பிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இருப்பினும் எங்களது சட்ட வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் கூறும் கருத்துப்படி அடுத்தகட்ட முடிவெடுக்கப்படும்” என கொதித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.