பிளாட்பார்ம் டூ மாளிகை: ரிங்கு சிங் மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு

அடிப்படை வசதிகளே இல்லாத வீட்டில் இருந்து புறப்பட்டு திறமை மூலம் இந்திய கிரிக்கெட்டில் ஸ்டாராக உயர்ந்திருப்பவர் தான் ரிங்கு சிங். உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் பிறந்த ரிங்கு, கிரிக்கெட்டில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவரது குடும்பத்தின் ஏழ்மை காரணமாக, அவரால் கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இதனால், ஒரு பயிற்சி மையத்தில் துப்புரவுப் பணியைத் தொடங்கினார். அப்பா கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவராக இருந்துள்ளார்.

சகோதரி, அம்மா ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவினால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியிருக்கிறார் ரிங்குசிங். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்தார். முதன்முதலாக பஞ்சாப் கிங்ஸ் அணி தான் 2017 ஐபிஎல்லில் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அப்போது அந்த தொகை என்பது நினைத்துகூட பார்க்க முடியாத விலையாக அவருக்கு இருந்தது. இருப்பினும் அந்த அணியில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து அடுத்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரிங்கு சிங்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங்கை 80 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

2018 ஆம் ஆண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் அறிமுகமான ரிங்கு சிங், தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். 2023 ஆம் ஆண்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணி முக்கியமான போட்டிகளில் வெற்றிபெற உதவினார். இதனால் கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாரூக்கானின் செல்லப்பிள்ளையாகவும் உயர்ந்தார் அவர். அப்போது முதல் தொடர்ச்சியாக கொல்கத்தா அணியில் விளையாடி வரும் ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி இப்போது 20 ஓவர் போட்டிகளில் பினிஷர் ரோலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் தான் ரிங்கு சிங்கின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. எம்ஆர்எப் உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங்களின் தூதுவராக கையெழுத்திட்டிருக்கும் அவருக்கு விளம்பர வருவாயாக 50 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஐபிஎல் மூலம் இதுவரை 4.40 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கும் அவர், உள்ளூர் போட்டிகள், விளம்பரங்கள் மூலம் அவர் மேலும் பல கோடிகளை சம்பாதித்துள்ளார். CAKnowledge படி, ரிங்கு சிங்கின் நிகர மதிப்பு ரூ.50 கோடி ஆகும். அவரது ஆண்டு வருமானம் ரூ.7 கோடி ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.