பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்காக வீராங்கனைகள் இன்று ஏலம்

மும்பை,

பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

2-வது டபிள்யூ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச்சில் நடத்தப்படுகிறது. இதையொட்டி வீராங்கனைகளின் மினி ஏலம் மும்பையில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் 104 இந்தியர்கள், 61 வெளிநாட்டினர் என்று மொத்தம் 165 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 109 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியவர்கள்.

5 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30 இடம் காலியாக உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கான 9 இடங்களும் அடங்கும். குறைவான வீராங்கனைகள் மட்டுமே தேவைப்படுவதால் யார்-யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆவலை தூண்டியுள்ளது.

ஆல்-ரவுண்டர்கள் வெஸ்ட் இண்டீசின் டியான்ட்ரா டோட்டின், ஆஸ்திரேலியாவின் கிம் கார்த் ஆகியோரது அடிப்படை விலை அதிகபட்சமாக ரூ.50 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையாளரான டியான்ட்ரா டோட்டின் அதிக விலைக்கு போவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதே போல் இலங்கை கேப்டன் சமாரி அட்டப்பட்டுவை வாங்கவும் போட்டோ போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஒரு நாள் போட்டியில் 8 சதங்களும், 20 ஓவர் போட்டியில் ஒரு சதமும் விளாசியுள்ள 33 வயதான சமாரி அட்டப்பட்டு பெண்களுக்கான பிக்பாஷ் கிரிக்கெட்டில் 5 அரைசதம் உள்பட 552 ரன்கள் (15 ஆட்டம்) குவித்து கவனத்தை ஈர்த்தார். இவரது அடிப்படை விலை ரூ.30 லட்சமாகும். டேனி வியாட், டாமி பீமோன்ட் (இருவரும் இங்கிலாந்து), சப்னம் இஸ்மாயில், நடின் டி கிளார்க் (தென்ஆப்பிரிக்கா), போபி லிட்ச்பீல்டு, அனபெல் சுதர்லாண்ட், அமன்டா ஜேட் வெலிங்டன் (ஆஸ்திரேலியா), தேவிகா வைத்யா, சுஷ்மா வர்மா, பிரீத்தி போஸ், பிரியா பூனியா, மன்னட் காஷ்யப், உமா சேத்ரி (6 பேரும் இந்தியர்) ஆகியோரும் நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளது.

ஏலத்தில் செலவிட அதிகபட்சமாக குஜராத் ஜெயன்ட்ஸ் ரூ.5 கோடியே 95 லட்சத்தை கையிருப்பாக வைத்துள்ளது. குறைந்த தொகையாக மும்பை இந்தியன்சிடம் ரூ.2.10 கோடி கைவசம் உள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் ஏலம் நிகழ்ச்சியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.