புதுடில்லி:பாலியல் பலாத்கார வழக்கில், கோல்கட்டா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், ‘வழக்குகளில் நீதிபதிகள் தங்கள் சொந்த கருத்துக்களை திணிப்பது அல்லது பிரசங்கம் செய்யக்கூடாது’ என, தெரிவித்துஉள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்த, 20 வயது இளைஞர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த 2022ல் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம், அந்த இளைஞரை விடுதலை செய்தது.
அந்த உத்தரவில், ‘இளம் பெண்கள், இரண்டு நிமிட சுகத்துக்கு இரையாகாமல் தங்கள் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என, தெரிவித்து இருந்தது.
மேலும், ‘இளைஞர்கள் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தது.
இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பான விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கூறியதாவது:
கோல்கட்டா உயர் நீதிமன்ற தீர்ப்பை கவனமாக ஆராய்ந்த பின், பத்தி 30.3 உட்பட அதன் பல பகுதிகள் மிகவும் ஆட்சேபனைக்குரியவையாகவும், முற்றிலும் தேவையற்றதாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
உத்தரவில் உள்ள வார்த்தைகள், அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் இளம் பருவத்தினரின் உரிமைகளை முற்றிலும் மீறுவதாக உள்ளன. வழக்கு எதற்காக தொடுக்கப்பட்டதோ அதை தாண்டி, நீதிபதிகள் தங்கள் சொந்த கருத்துக்களை திணிப்பது அல்லது பிரசங்கம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்