Welcome to Pak., girl who came looking for a lover | காதலனை தேடி வந்த பாக்., பெண்ணுக்கு வரவேற்பு

கோல்கட்டா, காதலனை கரம் பிடிப்பதற்காக, பாகிஸ்தானில் இருந்து கோல்கட்டா வந்துள்ள ஜவேரியா கானுக்கு, உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை சேர்ந்தவர் சமீர் கான். இவர், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் படித்து பட்டம் பெற்று, கோல்கட்டாவில் சுய தொழில் செய்து வருகிறார்.

இவர், கடந்த 2018ல் ஜெர்மனியில் இருந்து கோல்கட்டா வந்திருந்தபோது, தன் தாயின், மொபைல் போனில் ஜவேரியா கான் என்ற பெண்ணின் புகைப்படத்தை பார்த்து காதல் வயப்பட்டார்.

அந்த பெண்ணை பற்றி விசாரித்த போது, அவர் நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்தது. அவருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டதை அடுத்து இருவரும் காதலிக்கத் துவங்கினர்.

இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அந்த நேரத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்டதால் திருமணம் தள்ளிப் போனது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா வருவதற்கான ஜவேரியாவின் விசா விண்ணப்பம் இருமுறை நிராகரிக்கப்பட்டது.

அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், 45 நாட்களுக்கான விசா சமீபத்தில் கிடைத்தது.

இதையடுத்து, பஞ்சாபில் உள்ள பாக்., எல்லையான அட்டாரி வழியாக கடந்த 5ம் தேதி ஜவேரியா கானும், இந்தியாவுக்குள் நுழைந்தார்.

அவரை காதலன் சமீர் கான் மற்றும் அவரது தந்தை மேள தாளத்துடன் எல்லையில் வரவேற்றனர்.

காதலியுடன் கோல்கட்டாவை சுற்றி வரும் சமீர் கான், அங்கு பிரபலமான பானி பூரி உள்ளிட்ட தெருவோர உணவுகளை வருங்கால மனைவிக்கு வாங்கிக் கொடுத்தார்.

உள்ளூர் மக்கள் பலரும், இவர்களை அடையாளம் கண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.