ஊத்துக்கோட்டை அருகே தொகுப்பு வீடுகளில் ஒழுகும் மழைநீர் – இன்னலில் இருளர் இன மக்கள்

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டித் தந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் ஒழுகுவதால், இருளர் மக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ளது பூண்டி ஊராட்சி ஒன்றியம்- கச்சூர் ஊராட்சிக்குட்பட்ட வாழவந்தான்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் 97 இருளர் இன குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ள இம்மக்கள், தங்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் விளைவாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், இருளர் இன மக்களுக்கு இலவசமாக 53 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அந்த தொகுப்பு வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர், ஒவ்வொரு வீட்டின் உள் மற்றும் வெளிப் புறங்கள், தரைப் பகுதிகளில் பூச்சு வேலைகளை மேற்கொள்ளாமலும், வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை அமைக்காமலும் கட்டியுள்ளார் என, இருளர் இன மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவ்வாறு தரமற்ற முறையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டதால், கடந்த 5 ஆண்டுகளாக தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டு மழை நீர் ஒழுகுகிறது. இதனால், இருளர் இன மக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழரசு

இது குறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழரசு பேசுகையில், “வாழவந்தான்கோட்டை கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு அரசு கட்டித் தந்த தொகுப்பு வீடுகள், அதிக மணல் மற்றும் குறைந்த அளவு சிமென்ட் என தரமற்றதாக கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வீட்டு கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ள இந்த தொகுப்பு வீடுகள் பாதுகாப்பற்ற நிலையிலும், எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையிலும் உள்ளது.

ஆகவே, இந்த தொகுப்பு வீடுகளை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், வாழவந்தான்கோட்டை பகுதி குடிசை வீடுகளில் போதிய மின்சார வசதியில்லாமல் வசிக்கும் 44 இருளர் இன குடும்பங்களுக்கு போதிய மின்சார வசதிகள் கிடைக்கவும், தொகுப்பு வீடுகள் கட்டித்தரவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

செல்லம்மாள்

இருளர் இன மூதாட்டி செல்லம்மாள் கூறுகையில், “கதவு இல்லாமலும், பூச்சு வேலைகள் செய்யாமலும் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இதனால், இந்த தொகுப்பு வீடுகளில் கதவுகளாக பழைய சேலைகள், போர்வைகள், கோணி பைகள் தான் உள்ளன. இதனால், நாய், பூனை உள்ளிட்ட உயிரினங்கள் வீட்டினுள் எந்தநேரத்திலும் புகுந்து விடுகின்றன. வீட்டின் மேற்கூரைகளில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த விரிசல்கள் வாயிலாக மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுவதால் வீட்டினுள் தண்ணீருடனேயே இருக்க வேண்டியுள்ளது.

தரமற்ற தொகுப்பு வீடுகளில் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம். எங்கள் கஷ்டம் குறித்து அரசு அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது அரசு அதிகாரிகள் தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும்’’ என்றார்.

இது குறித்து, பூண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “வாழவந்தான் கோட்டையில் இருளர் மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகளை நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.