எண்ணூர் எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய குழு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: எண்ணூர் கழிமுக எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் மழையின் போது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் மர்மமான முறையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் கசிவால் அங்குள்ள குடியிருப்புகளின் சுவர்களில் எண்ணெய் படிந்தது. மீன்பிடி படகுகள் மீதும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் போது உடலிலும், உடையிலும் எண்ணெய் படிந்தது. அங்கு பெட்ரோலிய நாற்றமும் வீசியது. தீ விபத்து ஏற்பட்டுவிடுமோ என பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் எண்ணூர் முகத்துவார பகுதி மற்றும் கடல் நீர் பரப்பில் எண்ணெய் படலம் பரவியுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்குமோ என மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன் வந்து வழக்காக பதிவு செய்து, விளக்கம் கேட்டு மாசுக் கட்டுப் பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணா, தொழில் நுட்ப உறுப்பினர் கே.சத்ய கோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகு, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: எண்ணெய் கசிவு தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், “சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத மழை பெய்தது. இதனால் மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் மழைநீர் தேங்கியது. ஆலையை காக்க மழைநீர் வெளியேற்றப்பட்டது.

வாரியத்தின் ஆய்வில், மணலி சிபிசிஎல் நிறுவனத்தின் அருகில் உள்ள மழைநீர் வடிகால் வெளியேறும் பகுதியில் நீருடன் எண்ணெய் தடயங்கள் வெளியேறின. பக்கிங் ஹாம் கால்வாயிலும் எண்ணெய் கசிவு இருந்தது. கசிந்த எண்ணெயை அகற்ற சி.பி.சி.எல் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடுங்கையூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாயிலும் எண்ணெய் தடயம் இருந்தது” என குறிப்பிட்டுள்ளது.

நீர்வள ஆதாரத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், இந்த எண்ணெய் கசிவு, மக்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் பெரும் அச்சுறுத்தலானது. பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுகம், கொசஸ்தலையாறு மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் உள்ள நீர் பரப்பு என 5 கி.மீ. நீளத்துக்கு மேல் தடிமனான எண்ணெய் பொருள் மிதந்ததை பார்க்க முடிந்தது என கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே 5 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் பயணித்து கடலில் சேர்வதால், இதை அகற்றுவது கடும் சிரமமானது.

இந்த சூழலை பார்க்கும்போது, இதை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர், சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், மீன் வளத்துறை இயக்குநர், நீடித்த நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மைய ( NCSCM ) உறுப்பினர், மணலி தொழிற்சாலைகள் சங்க செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக 9 பேர் கொண்ட உயர் மட்டக்குழு அமைக்கப்படுகிறது.

இக்குழு, 11-ம் தேதி கடலிலும், முகத்துவாரத்திலும் எண்ணெய் பரவுவது தடுக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். நீர் பரப்பில் மிதக்கும் எண்ணெயை அகற்ற வேண்டும். எண்ணெய்கசிவால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல்நலனை பாதுகாக்க வேண்டும். எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள், சீரமைப்பதற்கான செலவு, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை மதிப்பிட வேண்டும். அவசர கால நடவடிக்கை முறையை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை டிச.12-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.