சிஎஸ்கே இந்த வேகப்பந்துவீச்சாளரை ஏலத்தில் எடுக்கணும்… டெத் ஓவரில் விக்கெட்டுகள் வரிசையாக விழும்!

IPL Auction 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கியமான அணி என்றே கூறலாம். ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008ஆம் ஆண்டில் இருந்து பலதரப்பட்ட ரசிகர்களால் கொண்டாடப்படும் அணியாகவும், அனைத்து தொடரிலும் ஒரு வலுவான அணியாகவும் சிஎஸ்கே அணி தனித்தன்மையுடன் நிற்கும். இதுவரை தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 5 முறை கோப்பை வாங்கியது. அணி நிர்வாகத்தினரின் சூதாட்டப் புகார் நிரூபணமானதால் 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் தடை செய்யப்பட்டிருந்தன. இதில் சிஎஸ்கே மீண்டு வந்த பின்னர் மூன்று கோப்பைகளை (2018, 2021, 2023) கைப்பற்றியது.

பக்காவான பிளேயிங் லெவன் பார்மட்

மேலும், 2020, 2022 ஆகிய இரண்டுகள் சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. இதன்மூலம், தான் விளையாடிய 14 தொடர்களில் 12 முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அந்த 12 முறையில், 10 முறை இறுதிப்போட்டி வரை தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு சிஎஸ்கே வெற்றிகரமான அணியாக வலம் வர தோனி (Dhoni) ஒரு காரணம் என்றாலும், அணியின் கட்டமைப்பு, அதுசார்ந்த பார்முலா, வீரர்களை அரவணைத்து செல்லும் நிர்வாகம், அனுபவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை கூறலாம். 

இதில் முக்கியமான ஒன்று சிஎஸ்கே அணியின் (CSK) பிளேயிங் லெவன் பார்மட். அதாவது, வெளிநாட்டு ஓப்பனர் – உள்நாட்டு ஓப்பனர், மூன்றாவது இடத்தில் வலுவான இந்திய பேட்டர், நான்காவது இடத்தில் ஒரு வெளிநாட்டு பேட்டர், மிடிலில் ஒரு வெளிநாட்டு ஆல்-ரவுண்டர், இரண்டு தரமான ஸ்பின்னர், ஒரு வெளிநாட்டு பந்துவீச்சாளர், ஒரு மித வேகப்பந்துவீச்சாளர் என 2008இல் ஆரம்பித்த இந்த பார்மட்டை சிஎஸ்கே சில சமயங்களில் மாற்றியிருக்கிறது என்றாலும் இது அவர்களுக்கான வெற்றி சூத்திரமாகவே பார்க்கப்படுகிறது. 

இர்பான் பதானின் ஆப்ஷன்

ஏறத்தாழ பல அணிகள் இதே பார்மட்டை பயன்படுத்தினாலும், சிஎஸ்கே இந்த பார்மட்டை முடிந்தவரை நிலையானதாக வைத்துக்கொள்கிறது, அதுதான் மட்டும் அணிகளிடம் இருந்து சிஎஸ்கேவை தனித்துவப்படுத்துகிறது. இப்போதும் கான்வே – ருதுராஜ், ராஹானே, மொயின் அலி, தூபே, தோனி, ஜடேஜா, தீக்ஷனா, பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீபக் சஹார் போன்றோர் இந்த பார்மட்டில் பக்காவாக அமர்வார்கள். அந்த வகையில், இந்த ஐபிஎல் சீசனில் (IPL 2024) சிஎஸ்கே அணிக்கு மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படுகிறார். வெளிநாட்டு ஆல்ரவுண்டரை நோக்கி ஏலத்தில் பெரிய தொகைக்கு ஒருவரை எடுக்க சிஎஸ்கே விரும்பும் என்றாலும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்பதிலும் அந்த அணி கவனம் செலுத்தும். 

அந்த வகையில், சிஎஸ்கே அணிக்கு தேவையான இந்திய வேகப்பந்துவீச்சாளர் குறித்து மூத்த இந்திய வீரர் இர்பான் பதான் (Irfan Pathan) கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேனலில் அவர் பேசியபோது,”சிஎஸ்கே அணிக்கு தீபக் சஹாரைப் போன்று, பல வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயமடையக்கூடியவர்களாக உள்ளனர். மேலும், சிஎஸ்கே தீபக் சாஹர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஹர்ஷல் படேல் ஏன் தேவை?

ஆனால் அவர் உடற்தகுதி பெறாமல் போனால் சிஎஸ்கேவுக்கு சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு என்ன தேவையென்றால், ஹர்ஷல் படேல் போன்ற ஒரு வீரர். பெங்களூரு அங்கிருந்து (சென்னை) வெகு தொலைவில் இல்லை, எனவே ஹர்ஷல் படேலை ஐந்து மணி நேரம் சிறிய பயணம் மூலம் அழைத்துச் செல்லுங்கள், அவரை சிஎஸ்கே அணியில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். 

ஹர்ஷல் படேல் கடந்த சில சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணிக்கு சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக, கடந்த இரு சீசன்களில் 28 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இருப்பினும், பெங்களூரு அணி அவரை தற்போதைய ஏலத்தை (IPL Auction) முன்னிட்டு அணியில் இருந்து விடுவித்துள்ளது. பெங்களூரு அணியே இவரை மீண்டும் முந்தைய விலையை விட குறைந்த விலையில் ஹர்ஷல் படேலை வாங்க திட்டமிட்டிருக்கலாம், இல்லை அவர்களுக்கு ஆர்வமில்லாதபட்சத்தில் பல அணிகள் அவருக்கு ஏலத்தில் போட்டிப்போடலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.