டி20 உலகக் கோப்பைக்கு யார் கேப்டன்…? பளிச்சுனு பதில் சொன்ன ஜெய் ஷா! இது லிஸ்டலேயே இல்லையே!

India National Cricket Team: கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஐசிசி தொடர் நடைபெறும். நடப்பாண்டில் ஒருநாள் போட்டிக்களுக்கான ஐசிசி உலகக் கோப்பை (ICC World Cup 2023) நடைபெற்றது. அடுத்தாண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறும், 2025ஆம் ஆண்டில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என வரிசைக் கட்டி நிற்கின்றன. 

இப்படி ஐசிசி தொடர்கள் அடுத்தடுத்து நடந்தாலும், இந்திய அணி (Team India) தனது ஐசிசி கோப்பை தாகத்தை எப்போது தணிக்கும் என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. அதுதான் கடைசியாக இந்தியா வென்ற ஐசிசி கோப்பை ஆகும்.

யார் தான் கேப்டன்?

அதற்கு பின் 10 ஆண்டுகளாக தற்போது வரை கோப்பையை கைப்பற்ற கடும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. நாக்-அவுட் சுற்றுகளில் தொடர்ந்து வெளியேறுவது இந்தியாவின் வாடிக்கையாகிவிட்டது. நடந்து முடிந்த உலகக் கோப்பையில் கூட இந்தியா இறுதிப்போட்டி வரை தோல்வியடையாமல் 10 போட்டிகளை வென்று வந்தாலும், அதில் ஆஸ்திரேலியாவிடம் உலகக் கோப்பையை பறிகொடுத்தது.

கடந்த காலங்களை மறந்துவிடலாம், வரும் ஜூன் 4 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) நடைபெறுகிறது. இந்தியா இப்போது இருந்த டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் தர தொடங்கிவிட்டது. ஆனால், வரும் டி20 உலகக் கோப்பையில் யார் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்ற கேள்விக்கு தற்போது வரை விடையில்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் கடந்த 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு பின் சர்வதேச டி20 போட்டிகளிலேயே விளையாடவில்லை. 

என்ன அவசியம் இப்போது?

இந்திய டி20 அணியின் கேப்டனாக கருதப்பட்ட ஹர்திக் பாண்டியா (Hardik Pandya Injury) காயம் காரணமாக இன்னும் அணிக்குள் திரும்பவில்லை. ஆஸ்திரேலியா தொடருக்கு அடுத்தும் தற்போது தென்னாப்பிரிக்கா (South Africa National Cricket Team) டி20 தொடரிலும் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) கேப்டனாக தொடர்கிறார். இதற்கிடையில் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்குள் வந்து கேப்டனாக செயல்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்தன. இருப்பினும், பிசிசிஐ முன்னர் அளித்த விளக்கத்தின்படி விராட், ரோஹித் ஆகியோர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறிது காலம் வரை ஓய்வு கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் (Jay Shah) நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து ஜெய் ஷா பேசுகையில்,”இப்போது தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம்தான் தொடங்குகிறது. ஐபிஎல் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் உள்ளது” என்றார். 

பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள்

“பெங்களூருவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமியையும், வடகிழக்கு மற்றும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள புதிய அகாடமிகளையும் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவோம். ஜம்மு காஷ்மீர் அகாடமியின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிங்க்-பால் டெஸ்டுக்கான பொது ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். 2-3 நாட்களில் டெஸ்ட் முடிந்துவிடுகிறது, 4-5 நாட்கள் வரை நீடிக்கும் டெஸ்ட் போட்டியை அனைவரும் பார்க்க ஆசைப்படுகின்றனர். பார்வையாளர்கள் பிங்க் பால் டெஸ்டை பார்க்கும் மனநிலையை எட்டும்போது, நாங்கள் இன்னும் பல பிங்க்-பால் டெஸ்டுகளை நடத்துவோம். கடந்த முறை இது ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டது. அதன்பிறகு யாரும் அதை நடத்தவில்லை. நாங்கள் இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், ஆனால் நாங்கள் அதை படிப்படியாக செய்வோம்” என்றார்.

மகளிர் கிரிக்கெட்…

மேலும், மகளிர் கிரிக்கெட் குறித்து பேசிய ஜெய் ஷா,” ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கையும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அதற்காக, ஒவ்வொரு கிரிக்கெட் அமைப்பும் முன்னெடுப்பை எடுக்க வேண்டும், இதைப் பற்றி நான் பேசுவது மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாது.

“இங்கிலாந்து கிரிகெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ ஆகிய நாங்கள் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கையை ஏற்றவாறு மற்றவர்களும் விளையாட வேண்டும். அப்போதுதான் ஆடவர் போட்டியை போன்று மகளிர் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.