வயதில் மூத்த பெண்ணுடன் திருமணம்… தாம்பத்திய உறவை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -126

தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை, ஓர் ஆண் திருமணம் செய்துகொள்வது அறிவியலில் வளர்ந்த இன்றைய சமூகத்திலும் பேசுபொருளாகவே இருக்கிறது. ஆனால், தன்னைவிட பத்து, பதினைந்து வயது மூத்த ஆணை, ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால் ‘இது நார்மல்தானே…’ என்று இன்றைய சமூகமும் கடந்து விடுகிறது. கல்வியறிவில் பின்தங்கிய குடும்பங்களிலோ ‘வயசுல மூத்தபொண்ணை கட்டிக்கிட்டா ஆயுசு குறைஞ்சிடும்’ என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியையே இன்றைய கட்டுரையில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

”அவர்கள் இருவருமே 30 வயதுகளின் ஆரம்பத்தில் இருந்தார்கள். இருவரும் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். புரொபோஸ் செய்த பிறகுதான், பெண் ஆணைவிட 2 வயது மூத்தவர் என்பது தெரிந்திருக்கிறது. வீட்டில் இதை ஏற்றுக்கொள்வார்களா என்கிற பயத்தைவிட, இது சரிதானா என்கிற பயம் இவர்களுக்கே வந்து விட்டிருக்கிறது. கூடவே, இந்த வயது வித்தியாசத்தால் செக்ஸ் லைஃபில் ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்கிற சந்தேகமும்… அதற்காகத்தான் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.

Sexologist Kamaraj

காரல் மார்க்ஸ் தன்னைவிட மூத்த பெண்ணைத்தான் திருமணம் செய்தார். சச்சின் உள்பட பல பிரபலங்கள் தன்னைவிட மூத்த பெண்களை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். செக்ஸுக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதற்கு, இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க வேண்டும், அவ்வளவுதான்.

ஆண் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்வதில் எங்கு சிக்கல் வருகிறது தெரியுமா..? அவனைச் சுற்றியுள்ள நண்பர்களும் குடும்பத்தினரும் அதைப்பற்றி நெகட்டிவ்வாகவோ அல்லது கேலியாகவோ பேசுகையில்தான், சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் ‘இது நார்மல் இல்லையோ’ என்று அச்சப்பட்டு விடுகிறார்கள். உண்மையில், இப்படிப்பட்ட திருமணங்களும் இயல்பானவையே.

sex education

என்னை சந்திக்க வந்திருந்த ஆணுக்கு, ‘மனைவி மூத்தவராக இருந்தால் தன்னால் செக்ஸில் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுமோ’ என்கிற அச்சமும் இருந்தது. இதுவும் அவசியமற்றது. காதலுடன், தாம்பத்திய உறவில் எப்படி ஈடுபடுவது, மனைவியை உறவில் எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது தெரிந்தாலே இந்த அச்சம் ஏற்படாது. தவிர, வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கும் இந்த அச்சம் வருகிறதுதானே… மற்றபடி, இருவருமே 30 வயதுகளில் இருப்பதால், குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடாதீர்கள் என அறிவுரை தந்து அனுப்பி வைத்தேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.