அர்ஜென்டினாவின் புதிய அதிபராக ஜேவியர் மிலே பதவி ஏற்பு.. ஆரம்பமே அதிரடி

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா நாட்டில் நவம்பர் 19 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் செர்ஜியோ மாசா, ஜேவியர் மிலே ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜேவியர் மிலே வெற்றி பெற்றார்.

இவர் தொலைக்காட்சி விவாதத்தில் நெறியாளராக பணியாற்றியபோது அரசியல்வாதிகளிடம் எழுப்பிய கடுமையான கேள்விகளால் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றார்.

ஜேவியர் மிலே பதவி ஏற்பதற்காக வாகனத்தில் சென்றபோது சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். அப்போது வாகனத்தை நிறுத்தி சாலையோரம் நின்றுகொண்டிருந்த தனது ஆதரவாளர் ஒருவரின் வளர்ப்பு நாயை கொஞ்சி மகிழ்ந்தார்.

பதவியேற்றபின் உரையாற்றிய அவர், நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார். நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும், இது தவிர்க்க முடியாதது என்றும் கூறினார்.

பின்னர் ஜேவியர் மிலே தனது முதல் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். அதில் அமைச்சகங்களின் எண்ணிக்கையை 18 இருந்து 9 ஆக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜேவியர் மிலே பிரசாரத்தின்போது கலாச்சாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்களை அகற்றுவதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.