ஆதித்யா L1 என்பது இந்தியாவின் முதல் சூரிய திட்டமாகும். இது 2023 செப்டம்பர் 2 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து PSLV ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. சூரியனை ஆய்வுசெய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 அதன் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வை தொடங்கியது. இப்போது முதன்முறையாக சூரியனின் முழுவட்ட புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. இதனை இஸ்ரோ மகிழ்ச்சிகரமாக மக்களுக்கு பகிர்ந்திருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது ஆதித்யா L1 திட்டத்தில் உள்ள சோலார் உல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) கருவி மூலம் 200-400 நானோமீட்டர் அலைநீள வரம்பில் சூரியனின் முதல் முழு-வட்ட படங்களை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளது. SUIT கருவி, இந்த அலைநீள வரம்பில் சூரியனின் ஒளிமண்டலம் மற்றும் குரோமோஸ்பியரின் படங்களைப் பதிவு செய்ய பல்வேறு அறிவியல் வடிகட்டிகளைப் பயன்படுத்துகிறது. படங்கள் நீலம், பச்சை மற்றும் சிவப்பு உட்பட வெவ்வேறு வண்ணங்களில் சூரியனைக் காட்டுகின்றன.
“SUIT பேலோட் நவம்பர் 20, 2023 அன்று ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டது. வெற்றிகரமான ப்ரீ-கமிஷனிங் கட்டத்திற்குப் பிறகு, தொலைநோக்கி டிசம்பர் 6, 2023 அன்று அதன் முதல் படங்களை எடுத்தது. பதினொரு வெவ்வேறு வடிகட்டிகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தனித்துவமான படங்களில் முதல் முறையாக முழு-வட்டு படங்கள் உள்ளன,” என்று ISRO தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
SUIT -ன் கண்காணிப்புகள் விஞ்ஞானிகள் காந்த சூரிய வளிமண்டலத்தின் இயக்கவியல் இணைப்பைப் படிக்க உதவும். மேலும் சூரிய கதிர்வீச்சு பூமியின் காலநிலை மீது ஏற்படுத்தும் தாக்கங்களை சிறப்பாக புரிந்துகொள்ள உதவும். வெளிப்பட்ட அம்சங்களில் சூரிய புள்ளிகள், பிளேஜ்கள் மற்றும் அமைதியான சூரிய பகுதிகள் ஆகியவை அடங்கும். இந்த ஆண்டு ISRO-க்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஆண்டாகும். இந்தியாவின் மூன்றாவது நிலவு திட்டத்திலும் விண்வெளி நிறுவனம் பெரும் வெற்றியைப் பெற்றது.
ஆகஸ்ட் மாதத்தில், ISRO சந்திராயன்-3 ஐ நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி, வரலாறு படைத்தது. இந்த புதிய கண்டுபிடிப்பு சூரியன் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தவும், சூரிய செயல்பாடுகள் பூமியின் காலநிலை மற்றும் வானிலைக்கு எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சிறப்பாக புரிந்துகொள்ளவும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.