"தேர்தல் வாக்குறுதி… டீசல் விலையில் 5 ரூபாய் குறைப்பது எப்போது?" – லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் 75-ம் ஆண்டு பவள விழா இருபாலைப் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மாநில சம்மேளனத் தலைவருமான தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, டெல்லி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் தலைவர் மதன், தெலங்கானா மோட்டார் டிரான்ஸ்போர்ட் துணைத்தலைவர் ஜவகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

லாரி உரிமையாளர்கள் (File Pic)

இந்தப் பவள விழாக் கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழகத்தில் தற்போது உள்ள அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. குறிப்பாக, டீசல் விலையில் ஐந்து ரூபாய் குறைப்பதாகவும், செயல்படாமல் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவதாகவும் வாக்குறுதி அளித்து இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும், 11 மாநிலங்களில் டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த ஐந்து ரூபாயைக் குறைக்காமல் தற்போது உள்ள தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, “ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் தமிழகத்தில் செயல்படாமல் உள்ள 35 சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக அறிவித்த நிலையில், இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. லாரிகளுக்கு ஒட்டக்கூடிய ஒளிரும் பட்டையை பல்வேறு மாநிலங்களில் 11 நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஐந்து நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு ஒளிரும் பட்டையை ஓட்டுவதற்கு நிர்பந்தப்படுத்துவதைக் கண்டிக்கிறோம்.

பல ஆண்டுகளாக ஒவ்வொரு மாநில எல்லைகளிலும் உள்ள செக் போஸ்ட்களில் அதிகாரிகள் லாரிகளிடம் வேறு மாநிலத்திற்குச் செல்வதற்கும், வேறு மாநிலத்திலிருந்து சொந்த மாநிலத்துக்கு வருவதற்கும் கையூட்டு கேட்கின்றனர். 1,000 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை கையூட்டு பெறுவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் எதற்காக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்குக் கையூட்டு தர வேண்டும்.

லாரி ஸ்டிரைக் (File Pic)

எனவே, வருகின்ற டிசம்பர் 25-ம் தேதி முதல், மாநில எல்லைகளில் உள்ள செக் போஸ்ட் அதிகாரிகள் கையூட்டு கேட்டால் பணம் தர மாட்டோம். மீறி வற்புறுத்தினால் அங்கேயே வாகனத்தை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம்.

தமிழகத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரியைக் கட்டச் சொல்லி வற்புறுத்துவதைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரைவில் நடைபெற உள்ள அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.