நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கை – கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை பதுக்கி வைத்து விலை உயர்த்துவதை தடுப்பதற்கு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை திருத்த அமைச்சரவை தீர்மாணித்துள்ளது என்று கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாட்டினுள் போதுமான அளவு அரிசி இருப்பு இருக்கும்போது, சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி பற்றாக்குறை ஒன்று இருப்பதாக காட்ட முயற்சிப்பது, இந்த பண்டிகைக் காலத்தில் அரிசி விலையை அதிகரிக்க முயற்சிக்கும் உபாயமாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு பரிசோதனை செய்வதற்கும் வழக்குத் தொடர்வதற்கும் அதிகாரம் இருந்தாலும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களை மாத்திரமே பரிசோதனை செய்து வழக்குத் தொடர அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. அரிசி அல்லது பிற உணவுப் பொருட்களை மறைத்து வைக்கும் நபர்கள் மீது வழக்குத் தொடரவோ அல்லது அத்தகைய இடங்களை பரிசோதனை செய்யவோ அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

இதன்காரணமாக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, தற்போது அரிசியை மறைத்து வைத்திருக்கும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் இடங்களை பரிசோதனை செய்து வழக்குத் தொடர அதிகாரம் வழங்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, நுகர்வோர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் அடுத்த மாதம் அமைச்சரவைக்கு தேவையான திருத்தங்களைச் சமர்ப்பிக்க உள்ளார்.

அரிசியை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சர் இணங்கியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பிலும் அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், இந்த அரிசி தட்டுப்பாடு பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த பண்டிகை காலத்தில் கீரி சம்பாவிற்கு அதிக தேவை இருப்பதால், அதற்கு நிகராக மூன்று இலட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது, ஆனால் கமத்தொழில் அமைச்சர் என்ற வகையில், அதன் அளவை 50,000 மெட்ரிக் டொன்னாக குறைக்க முன்மொழிந்ததாகவும், அதற்கு அமைச்சரவை அனுமதியளித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாடு காரணமாக 08 இலட்சம் மெற்றிக் டொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் வரையில் இதுவரை வெளிநாட்டிலிருந்து ஒரு அரிசி மணி கூட இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வருடம் முழுவதும் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை நாட்டு மக்கள் உண்பதாகவும், இதன் மூலம் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட்ட 300 மில்லியன் டொலர்களுக்கு மேல் இந்த வருடம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே இதற்கு பொதுமக்கள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.