2019-ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370-ஐ அதிரடியாக நீக்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கச் செய்யப்பட்டன. 23 மனுக்கள் மீதான விசாரணையை தொடர்ந்து 16 நாட்களாக விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 11) காலை தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சய் கிஷன் கௌல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370-ஐ நீக்கி குடியரசுத்தலைவர் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் உறுதி செய்திருக்கிறது. ‘அரசியலமைப்புச் சட்ட விதிகளை மத்திய அரசின் ஒப்புதலுடன் ஜம்மு காஷ்மீருக்கு குடியரசுத்தலைவர் பயன்படுத்தியிருக்கலாம். இதற்கு, மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை’ என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
மனுதாரரின் வாதங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ‘பிரிவு 370, தற்காலிகமான ஒன்று’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், ‘குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, மாநிலத்தின் சார்பில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாறிவிட்டது.
இதை அரசியலமைப்பு சட்டம் 1, 370-வது பிரிவுகள் தெளிவுபடுத்துகின்றன. அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு தற்காலிகமானது, அதை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. மாநிலத்தில் போர் சூழல் காரணமாக இடைக்கால ஏற்பாடாகவே அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டது’ என்றும் தலைமை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
‘ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது. இந்திய அரசியலமைப்புடன் இணைந்ததுதான் ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு. ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும். ஜம்மு காஷ்மீருக்கு விரைவாக மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, 2024-ம் ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும்’ என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் தலைமை நீதிபதி.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பா.ஜ.க-வினர் கொண்டாடுகிறார்கள். பிரதமர் மோடி, ‘2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட முடிவு, அரசியலமைப்பு ரீதியில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பிரிவு 370-ஐ நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது’ என்று தன் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரிவு 370 நீக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய மாநாடு கட்சி உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்தன. ஆனால், மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பாக வந்துவிட்டதால், அந்தக் கட்சிகள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றன.
ஆனால், பிரிவு 370 நீக்கப்பட்டது, ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிவரும் கட்சிகளின் தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தன் வீட்டுக்கு எதிரே இருந்து பேசிய வீடியோவை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா.
“என்னுடைய வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அதனால், வெளியே இருந்து பேசுகிறேன். யாருடனும் பேசுவதற்கு எனக்கு அனுமதி இல்லை. இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியிருக்கும் தீர்ப்பு குறித்து என்னுடைய கருத்தை ஊடகங்களிடம் சொல்ல விரும்பினேன். ஆனால், என் வீட்டுக்குள் ஊடகங்கள் வர அனுமதிக்கப்படவில்லை. என்னையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை” என்று உமர் அப்துல்லா கூறியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ‘ஏமாற்றமளிக்கிறது. ஆனால், மனம் உடைந்துவிடவில்லை. போராட்டம் தொடரும்’ என்று உமர் அப்துல்லா கூறியிருக்கிறார். மற்றொரு பதிவில் அவரது வீடு பூட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் உமர் அப்துல்லா, ‘துணைநிலை ஆளுநர் அவர்களே, என் வீட்டின் கதவை நான் பூட்டவில்லை. உங்கள் போலீஸார்தான் என் வீட்டின் கதவைப் பூட்டியிருக்கிறார்கள். அதை ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள். உங்கள் போலீஸ் செய்த வேலை உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் அவமதிக்கப்படுகிறீர்ளா? அல்லது, உங்கள் போலீஸ் சுயேச்சையாக செயல்படுகிறதா?’ என்று கோபத்துடன் கூறியிருக்கிறார்.
பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய பா.ஜ.க அரசு கூறியது. மத்தியப்பிரதேசம் உட்பட தற்போது நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலுடன் சேர்த்து ஜம்மு காஷ்மீருக்கும் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அங்கு தேர்தலை நடத்த மத்திய அரசு ஆர்வம் எதுவும் காட்டவில்லை.
‘ஜம்மு காஷ்மீர் மக்கள் பா.ஜ.க மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் எங்கு தேர்தல் நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. தற்போது 2024-ல் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிருப்பதால், வரும் ஆண்டில் அங்கு தேர்தல் நடத்தப்படலாம். சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும், மீண்டும் மாநில அந்தஸ்து தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் கட்சிகளின் போராட்டம் தொடரும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.