சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் தடுப்பதற்கான சிறப்புத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
இந்தியா முழுவதும் கடந்த 2022&ஆம் ஆண்டில் நிகழ்ந்த குற்றங்களின் தொகுப்பு அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 2021&ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்பாக 4415 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2022&ஆம் ஆண்டில் 4906 வழக்குகளாக அதிகரித்திருக்கிறது. அதேபோல், பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 5026 ஆக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளில் 3621 பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 1008 பெண் குழந்தைகள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். 367 சிறுமிகள் பாலியல் சார்ந்த தொடர் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கையும் 2021-ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 8501-லிருந்து 9207 ஆக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 11.12% அளவுக்கும், பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை 8.31% அளவுக்கும் அதிகரித்துள்ளன. இதை ஏற்க முடியாது.
பெண்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழ்வதை எந்த மாநிலம் உறுதி செய்கிறதோ, அந்த மாநிலம் தான் நல்லாட்சி நடத்தும் மாநிலம் ஆகும். ஆனால், தமிழ்நாடு அந்தப் பெருமையைப் பெறுவதற்கு தவறி விட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் என்ற அவப்பெயரைப் பெற்றிருந்த பிகார், இராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கூட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்து விட்டன. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இரு மடங்குக்கும் அதிகமாக நிகழ்கின்றன.
இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உத்தரப்பிரதேசம், மராட்டியம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நான்காவது மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருக்கிறது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் தோல்வி தான் இந்த அவப்பெயருக்கு காரணம் ஆகும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததற்கான முதன்மைக் காரணம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கான இயற்றப்பட்ட சட்டங்களின்படி என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ, அவை எதுவுமே செய்யப்படாதது தான். அடுத்ததாக, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், உடனடியாக கைது செய்யப்படுவோம்; வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாதது தான். அரசு மற்றும் காவல்துறையில் செயலற்ற தன்மை தான் இவற்றுக்கு காரணமாகும்.
அதுமட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கான சூழல் அமைப்பை சீரமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தடையின்றி மது கிடைப்பதைத் தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும்; பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளைப் பின்தொடர்ந்து சென்றும், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வழியில் குழுவாக கூடியிருந்தும் கிண்டல் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை வலுப்படுத்துவது, மகளிருக்கான சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கையை கிராமப்புறங்கள் வரை அதிகரிப்பது, பாலியல் சீண்டல் ஆபத்துகள் குறித்து குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு விழிப்புணர்வூட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கஞ்சா போதைப் பழக்கம் பெண்கள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் கஞ்சா தாராளமாக கிடைப்பதால், சிறுவர்கள் முதல் அனைவரும் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வெறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கும், சட்டம் & ஒழுங்கு சீரழிவதற்கும் கஞ்சா தான் பெரும் காரணமாக உள்ளது. பெண்கள் அச்சமின்றி வாழ வேண்டுமென்றால் கஞ்சா ஒழிக்கப்பட வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையில் தனிப் பிரிவு தொடங்கப்பட வேண்டும்; அதன் தலைவராக டி.ஜி.பி. நிலையிலான பெண் அதிகாரி ஒருவர் அமர்த்தப்பட வேண்டும் என்று 2014 முதல் பா.ம.க வலியுறுத்தி வருகிறது. அதையேற்று 2019&ஆம் ஆண்டில் கூடுதல் டி.ஜி.பி தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. மாவட்ட கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பிரிவுடன் மகளிர் காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டன. ஆனாலும், மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அதிகரிக்கின்றன என்றால், அதற்கான காரணம் என்ன? என்பதை அரசும், காவல்துறையும் ஆய்வு செய்ய வேண்டும்.
பெண்களை பாதுகாப்பாக வாழ வைக்காத மாநிலம் வளராது. எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் தடுப்பதற்கான சிறப்புத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.