சென்னை: அண்மையில் சென்னையில் பெய்த கனமழையின்போது, மீட்பு பணியில் போலீஸாரும், காவல் பேரிடர் மீட்பு குழுவினரும் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி அசத்தி உள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3-ம் தேதி இரவு தொடங்கிய கனமழை, 24 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டியது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. நீர்த்தேக்கங்களில் இருந்து நீரும் திறந்து விடப்பட்டதால் சென்னை உட்பட 4 மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழப்பட்டன. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.
உயிரை காப்பாற்றிக் கொள்ள மக்கள் போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மாலை நேரத்திலிருந்து இருள் சூழ்ந்தது. அந்த நேரத்தில் தகவல் தொடர்பு சேவையும் முடங்கியது. அரசு கொடுத்த உதவி எண்களை பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. செல்போன்களை சார்ஜ் செய்யவும் மின்சாரம் இல்லை. இந்த நேரத்தில், சென்னை போலீஸார் 18,400 பேர் களத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் மாநகராட்சி, தீயணைப்பு துறை உட்பட மற்ற துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற தொடங்கினர். குறிப்பாக செல்போன்கள் செயல்படாத நிலையில், காவல்துறையின் வாக்கி டாக்கி அவர்களுக்கு கை கொடுத்தது.
காவல் பேரிடர் மீட்புக் குழு: மேலும் பட்டினப்பாக்கம், காசிமேடு, மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து படகுகளை வரவழைத்து மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்குள் டார்ச் லைட்டுகளுடன் சினிமா பாணியில் பயணித்தனர். இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே காவல்துறை சார்பில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் போல, சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழு என பிரத்யேக குழுவை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தயார் படுத்தி வைத்திருந்தார். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தலா ஒரு குழு என மழை பெய்வதற்கு முன்னரே 12 குழுவினரும் தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டனர்.
முன்னதாக இந்த குழுக்களுக்காக காவல் துறையிலிருந்து திறமையானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு எந்தவொரு சம்பவத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நீரில் மிதக்கும் மிதவை, படகை கையாளுவது குறித்து தனியாக பயற்சி கொடுக்கப்பட்டதோடு 21 வகையான மீட்பு உபகரணங்களோடு வாகனங்களும் வழங்கப்பட்டிருந்தன. மேலும் சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் எவை என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு அதுவும் போலீஸாரிடம், அதிகாரிகள் ஒப்படைத்து இருந்தனர். இதனால், அந்த பதிகளுக்கு அந்தந்த காவல் நிலைய எல்லையில் உள்ள போலீஸார் மற்றும் காவல் பேரிடர் மீட்பு குழுவினர் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உடல் நலம் குன்றிய நிலையிலும் கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு) ஆகியோர்களுடன் கொட்டும் மழையிலும் வாகனம் மூலமும், படகு மூலமும் விரைந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். இதனால், காவல்துறையினர் பிற துறையினருடன் ஒருங்கிணைந்து முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர் என அனைத்து தரப்பு மக்களையும் விரைவாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். அதோடு நின்று விடாமல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர். பெரியவர்களை தோளில் சுமந்தும், குழந்தைகள் சிறுவர்களை கைகளில் ஏந்தியும், பெரியவர்களை படகுகளிலும் ஜேசிபி இயந்திரங்களிலும், லாரிகளிலும் ஏற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் வியக்க வைத்தனர்.
மீட்பு பணியில் ஈடுபட்டது குறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது: பேரிடர் மீட்பு துறையில் ஏற்கெனவே பணியாற்றியுள்ளேன். எனவே, எந்த பேரிடரையும் எதிர்கொள்ளும் வகையில் காவல் துறையினரை முன் கூட்டியே தயார் செய்யும் வகையில் 3 மாதங்களுக்கு முன்னரே காவல் துறையினரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தோம். மேலும், மாநில பேரிடர் ஆணையம் வாயிலாக ரூ.75 லட்சம் செலவில் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டன. தற்போதைய பேரிடரின்போது சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மீட்பு நடவடிக்கை, உணவு, குடிநீர், தங்குமிடம், வாகனம், போக்குவரத்து மற்றும் மருத்துவ உதவி கோரி 1,728 அழைப்புகள் வந்தன.
18,264 பேரை மீட்டுள்ளோம். இதுபோக ரோந்து பணி மற்றும் பிற துறையினருடன் இணைந்து 70 ஆயிரம்பேர் வரை நேரடியாகவும், படகு மூலமும் மீட்டுள்ளோம். இதுதவிர புயலால் சாய்ந்த 2,807 மரங்களை அகற்றி உள்ளோம். 83,414 உணவு பொட்டலங்கள் வழங்கினோம். வெள்ளத்தில் சிக்கிய 954 வாகனங்களை மீட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார். காவல் பணி மட்டும் அல்லாமல் பேரிடர் கால மீட்பு பணியிலும் ஈடுபட்ட காவலர்கள் மீது மக்களின் மரியாதை கூடியுள்ளது.