மொபைல் போன் இல்லாதவர்களைக் கைவிட்டு எண்ணிவிடக்கூடிய நிலை இருக்கிறது. ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அங்கு 4 மொபைல் போன்கள் இருக்கின்றன. போன் இருப்பதால் வீட்டில் ஒருவருக்கொருவர் அதிகமாகப் பேசிக்கொள்வதும் கிடையாது. சிலர் பொது இடத்தில் சத்தம் போட்டு மொபைல் போனில் பேசிக்கொள்வது வழக்கம். அது போன்று சத்தமாகப் பேச மும்பை அருகிலுள்ள நவிமும்பை மாநகராட்சி பஸ்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நவிமும்பை மாநகராட்சிப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `பஸ் பயணத்தின்போது அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக, சத்தமாக போனில் பேசவோ அல்லது சத்தமாக மியூசிக் கேட்பதோ கூடாது.
பஸ்ஸுக்குள் இயர்போன் இல்லாமல் மியூசிக் கேட்பது மற்றும் சத்தமாக போனில் பேசுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. தடையை மீறிச் செயல்படுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. புதிய உத்தரவை பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் கட்டாயம் அமல்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மும்பையில் ஏற்கெனவே `பெஸ்ட் பஸ் நிர்வாகம்’ இது தொடர்பாக பயணிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மும்பையிலுள்ள பெஸ்ட் பஸ்களில் பயணம் செய்யும்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக மொபைல் போனில் சத்தமாகப் பேசவோ அல்லது சத்தமாக மியூசிக் கேட்கவோ கூடாது என்று கடந்த ஏப்ரல் மாதமே உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பயணிகளிடமிருந்து வந்த தொடர் புகாரைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், பயணிகள் இயர்போன் பயன்படுத்தி மியூசிக் கேட்கவோ அல்லது பேசவோ செய்யலாம் என்றும் பெஸ்ட் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மாநகராட்சிப் பேருந்துகளின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.