மிக்ஜாம் புயல் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும்விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறது. இது மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், எதிர்க்கட்சியினர் அரசின்மீது விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்கள்.
தி.மு.க அரசு 2021-ம் ஆண்டு ஆட்சியமைத்தபோது, தமிழ்நாடு கொரோனாவில் சிக்கிக்கொண்டிருந்தது. அந்தச் சூழலில் கொரோனா பேரிடரை மிகத் திறமையாகக் கையாண்ட அரசாக தி.மு.க அரசு இருந்தது. வட மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், டெல்லியில் பிணங்கள் மிதந்துகொண்டிருந்தன. பெரிய நகரங்களில், மருத்துவமனைகளிலெல்லாம் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளானார்கள். ஆனால், அந்த நேரத்தில்கூட தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சிறப்பாகக் கையாண்டார்.
அந்த நேரத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அமைச்சர் என நியமித்து, தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்து, மருத்துவ சிகிச்சை என உடனடியாக அந்தத் தேவைகளை நிறைவேற்றி வந்தார். அப்போது இருந்த சூழலையும், தமிழ்நாடு அரசு அதை எதிர்கொண்டவிதத்தையும் மக்கள் நன்றாக அறிவார்கள். ஒருகட்டத்தில் முதல்வர் ஸ்டாலினே கவச உடைகளை அணிந்துகொண்டு, நோயாளிகளைச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். பாதுகாப்பாக இருந்துகொண்டு, `மணியாட்டுங்கள், கைதட்டுங்கள்’ என்று கூறாமல், களத்தில் இறங்கிப் பணியாற்றினார்.

எனவே, ஓர் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் அரசு அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு, சிறந்த எடுத்துக்காட்டாக தமிழ்நாடு தி.மு.க அரசு விளங்கியது. அதே போன்றுதான் தற்போது நடந்த பேரிடரிலும் முதல்வர் ஸ்டாலின், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல் முழுமையாகக் களத்தில் இருந்தார். சென்னையில் 2015-ம் ஆண்டு வந்த வெள்ளத்தின்போது, அப்போதைய ஆட்சியாளர்கள் எப்படி மோசமாகக் கையாண்டார்கள் என்பதும், தற்போது அதைவிட மோசமான சூழல் எவ்வளவு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது என்பதையும் மக்கள் பார்த்துவருகிறார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதி பகுதியாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல நிவாரணப் பணியின்போதும், முதலமைச்சர் படத்தை ஒட்டிக்கொள்ளாமல், யாருக்கு நிவாரணம் சென்று சேர வேண்டுமோ அவர்களுக்கு நிவாரணத்தைக் கொண்டு சேர்க்கும் பணிகள் நடந்துவருகின்றன. 2015-ம் ஆண்டு வெள்ளத்தை, தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். நிவாரணப் பணிகளில் எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லை என நீதிமன்றமே அந்த நிவாரணப் பணிகளைச் சுட்டிக்காட்டியது.

அந்த அளவில்தான் நிவாரணம் இருந்தது. ஆனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ரூ.10,250 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், அவர் வழங்கிய நிவாரணத் தொகை வெறும் ரூ.5,000. நமது அரசு ரூ.5,000 கோடி மட்டும்தான் நிவாரணமாகக் கேட்டிருக்கிறோம்.
ஆனால் நாம் வழங்கவிருக்கும் நிவாரணத் தொகை ரூ.6,000 என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்த 6,000 ரூபாயைக்கூட மத்திய அரசுதான் வழங்குகிறது என அண்ணாமலை குறிப்பிட்டுவருகிறார். வெள்ளம் வந்தபோது கமலாலயத்தைப் பூட்டிக்கொண்டு, பாதுகாப்பாக இருந்தவர், வெள்ளம் வடிந்ததற்குப் பிறகு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுகொண்டு பேட்டி கொடுத்துவிட்டு, சேலத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அங்கிருந்துகொண்டு நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி, தமிழ்நாடு அரசு கேட்டிருக்கும் நிவாரண நிதியை வாங்கிக்கொடுக்க வேண்டும். ஏற்கெனவே ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை விவகாரத்தில் மத்திய அரசிடம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நான் சட்டப்பேரவையில் குறிப்பிட்டிருந்தேன். நாம் ஒரு ரூபாயை மத்திய அரசிடம் கொடுத்தால், நமக்கு 29 காசுகள்தான் திரும்பக் கிடைக்கின்றன.
2014 – 15 முதல் 2021 – 22 வரை மத்திய அரசுக்கு நேரடி வரிப் பகிர்வாக நாம் கொடுத்திருப்பது ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்கு அவர்கள் வழங்கியிருப்பது 2.8 லட்சம் கோடி மட்டுமே. 2015-ம் ஆண்டு வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 200 பேர். 23 லட்சம் பேர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டார்கள். 10 நாள்கள் மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. அரசின் சொத்துகளும், தனியார் சொத்துகளும் பெருமளவு சேதமடைந்தன. சென்னை மாநகரம் பல நாள்கள் முடங்கியிருந்தது. ஆனால், தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் பேச வேண்டும்.

கொரோனா ஊரடங்கின்போது எடப்பாடி பழனிசாமியின் அரசு 1,000 ரூபாய்தான் நிவாரணத் தொகை வழங்கியது. ஆனால், கஜானா துடைக்கப்பட்ட நிலையிலும்கூட, முதல்வர் ஸ்டாலின் 4,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார். தானே புயலின்போது அமைச்சர்கள் பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். 2017-ம் ஆண்டு ஒக்கி புயலின்போதுகூட எந்த அமைச்சரும் கன்னியாகுமரிக்குச் செல்லாமல், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். கஜா புயலின்போது எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார்.
ஆனால், தி.மு.க அரசு பேரிடர் காலங்களில் மக்களோடு இறங்கித் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடங்களுக்கும் முதலமைச்சரே நேரடியாகச் சென்று, பார்வையிட்டு உண்மைத் தகவல்களை அறிந்துகொண்டார். புயலுக்குப் பிறகும்கூட முதலமைச்சர் அத்தனை பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இத்தனை பணிகளுக்குப் பிறகும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவதூறுப் பிரசாரத்தைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை, மக்கள் புரிந்துகொள்வார்கள். வடசென்னையில் மழைநீரில் கலந்த ஆயில் தொடர்பாக அந்தத் தொகுதி அமைச்சரே நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். ரேஷன் கார்டு இருக்கும் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். 16-ம் தேதி முதல் அதற்கான டோக்கன் வழங்கப்படும். அடுத்த 10 நாள்களுக்குள் அந்தப் பணி நிறைவடையும்” என்றார்.