“ரசிகர்களின் ரசனைமிகு வில்லன்” நடிகர் ரகுவரன்.

1. தனித்துவமிக்க உடல்மொழி, வித்தியாசமான வசன உச்சரிப்பு என இரண்டும் கலந்து மிரட்டும் வில்லனாக, உருக வைக்கும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த நடிகர் ரகுவரனின் 65வது பிறந்த தினம் இன்று…

2. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு என்ற ஊரில், 1958ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று, வேலாயுதன் மற்றும் கஸ்தூரி தம்பதியரின் மகனாகப் பிறந்தார் ரகுவரன்.

3. கோயம்புத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்த இவர், நடிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக படிப்பை தொடராமல் நடிப்பை நாடி சினிமா உலகிற்குள் நுழைந்தார்.

4. “ஸ்வப்ன திங்கள்கள்” என்ற கன்னட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடமேற்று நடித்ததன் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு ஒரு நடிகராக அறிமுகமானார் ரகுவரன்.

5. தொடர்ந்து சிறு சிறு வேடமேற்று நடித்து வந்த இவர், 1979லிருந்து 1983வரை “சென்னை கிங்ஸ்” என்ற நாடகக் குழுவில் இணைந்து ஒரு நாடக நடிகராகவும் பயணித்தார்.

6. 1982ஆம் ஆண்டு இயக்குநர் கே ஹரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த “ஏழாவது மனிதன்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

7. இதனைத் தொடர்ந்து “ஒரு ஓடை நதியாகிறது”, “நீ தொடும்போது” போன்ற படங்களில் நாயகனாக நடித்து வந்த இவருக்கு எதுவும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த “சில்க்… சில்க்… சில்க்…” என்ற திரைப்படம் இவரை ஒரு புதிய வில்லன் நடிகராக தமிழ் திரையுலகிற்கு அடையாளம் காட்டியது.

8. “குற்றவாளிகள்”, “மிஸ்டர் பாரத்”, “மந்திரப் புன்னகை”, “பூவிழி வாசலிலே”, “ஊர்க்காவலன்”, “மனிதன்” போன்ற படங்களில் தொடர்ந்து வில்லன் வேடமேற்று நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

9. இடையிடையே “சம்சாரம் அது மின்சாரம்”, “மக்கள் என் பக்கம்”, “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு”, “அண்ணாநகர் முதல் தெரு”, “அஞ்சலி” போன்ற படங்களில் குணச்சித்திர வேடமேற்று நடித்தும், தனது பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலால் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார் ரகுவரன்.

10. குறிப்பாக “புரியாத புதிர்”, “சம்சாரம் அது மின்சாரம்”, “பாட்ஷா”, “முதல்வன்” போன்ற சில படங்கள் ரகுவரனை இன்றும் நினைவு கூறத்தக்க திரைப்படங்களாக இருந்து வருகின்றன என்றால் அது மிகையன்று.

11. தனது கலைத்துறை பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் மின்னிய இந்த அற்புத கலைஞன், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 2008ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று இயற்கை எய்தினார்.

12. எந்த ஒரு நடிகரின் பாதிப்புமின்றி, தனித்துவமான உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் தென்னிந்திய திரையுலகையும், திரைப்பட ரசிகர்களையும் தன்பால் ஈர்க்கச் செய்த தனிப்பெரும் திரைக்கலைஞனான நடிகர் ரகுவரனின் பிறந்த தினமான இன்று அவருடைய நினைவுகளை ஒரு சிறு குறிப்பாக பகிர்ந்து கொள்வதில் நெஞ்சம் நிறைவு கொள்வோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.