ஹமாஸ் தாக்குதலை வைத்து கொண்டு பாலஸ்தீனர்களை தாக்குவது நியாயம் இல்லை: ரஷியா கண்டனம்

தோஹா,

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் 2 நாள் சர்வதேச கூட்டம் ஒன்று நடந்து வருகிறது. இதில், ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கே லாவ்ரவ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, கடந்த அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்காக, காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை கூட்டாக தண்டிக்கும் செயலை நியாயப்படுத்துவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.

முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள நிலைமையை சர்வதேச அளவில் நாடுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து அவர் பேசும்போது, இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து முன்னறிவிப்பின்றி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் என்பது வெற்றிடத்தில் ஏற்பட்டதல்ல.

காசாவில் பல தசாப்தங்களாக காணப்பட்ட தடைகள் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு இருக்கும் என அளித்த வாக்குறுதிகள் தசாப்தங்களாக நிறைவேற்றப்படாதது ஆகியவற்றால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு இஸ்ரேல் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன் ரஷிய அதிபர் புதின் கூறும்போது, காசாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்பது அமெரிக்க ராஜதந்திரத்தின் தோல்வியாகும் என்றும் பல தசாப்தங்களாக நீடித்து வரும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலுக்கு மத்தியஸ்தராக செயல்பட ரஷியா தயார் என்றும் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேலில் 1,147 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டது. இதன்பின்பு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, பணய கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். பதிலுக்கு பாலஸ்தீன கைதிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். எனினும், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.