சென்னை: பாதுகாப்பான பணியிடம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜனவரி 8-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்(தமிழ்நாடு) மாநிலப் பொதுச்செயலாளர் இரா.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 6,000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் 12 மணி நேர வேலை நேரமாக பணியாற்றி வருகின்றனர்.
அடிப்படை வசதிகள்: தமிழக அரசுடன் ஈஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் இணைந்து இச்சேவையை நடத்தி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழக மக்களின் உயிருக்கு ஆபத்தான தருணங்களில் தங்களது நேர்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய உழைப்பின் மூலம் உயிர்காக்கும் பணியை தொழிலாளர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், தொழிலாளர்களுக்கு சுத்தமான குடிநீர், பாதுகாப்பான ஓய்வறை,கழிப்பறை மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணியிடம் போன்ற அடிப்படை வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.
மூன்று ஷிப்டுகளாக… 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சட்ட விரோதமான 12 மணி நேர வேலை முறையை கைவிட்டு, சட்டப்படியான 8 மணி நேர வேலை வழங்கி, மூன்று ஷிப்டுகளாக ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும். தொழிலாளர்களின் வாரவிடுமுறை நாட்களில் ஆள்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும். நிர்வாகத்தின் சட்டவிரோத, சேவை விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கும் நோக்கில்பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண் தொழிலாளர்கள்: தமிழகம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் நிறுத்துமிடங்களில் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் பணி புரியும் இடங்களில் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான கழிவறைவசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி8-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மதுரையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஏற்பாடுகள் குறித்தும், கோரிக்கைகள் மீது நிர்வாகம் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தவலியுறுத்தியும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.