பெலகாவி காதலித்த இளம்பெண்ணுடன், இளைஞர் ஓடியதால், அவரது தாயை, பெண்ணின் குடும்பத்தினர் நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்துச் சென்று தாக்கிய கொடூர சம்பவம், கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ஒரு பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் பெலகாவியின், ஹொச பன்டமூரி கிராமத்தில் வசிக்கும் துண்டப்பா, 25, பிரியங்கா, 21, சில ஆண்டுகளாக காதலித்தனர். இருவருமே எஸ்.சி., சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களின் காதலுக்கு பிரியங்காவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரியங்கா மனம் மாறாததால், அவசர, அவசரமாக வேறொரு இளைஞருடன் மகளுக்கு திருமணம் நிச்சயித்தனர்.
நேற்று முன்தினம் திருமணம் நடக்கவிருந்தது. இதனால் பிரியங்காவும், துண்டப்பாவும் முதல் நாள் இரவே ஊரை விட்டே ஓடினர். மகள் ஓடியதை அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கொதிப்படைந்த அவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு, துண்டப்பாவின் வீட்டுக்குள் நுழைந்து, பொருட்களை அடித்து நொறுக்கினர். அவரது தாயையும், பாட்டியையும் வெளியே இழுத்து வந்து தாக்கினர். வீட்டுக்கு தீ வைத்தனர்.
பின், தாயை நிர்வாணமாக்கி, கிராமத்தின் சாலைகளில் ஊர்வலமாக இழுத்து சென்று, கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
தகவலறிந்து கிராமத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அப்பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். பிரியங்கா குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சம்பவம் நடந்த கிராமத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது துண்டப்பாவின் பாட்டி, அமைச்சரின் காலில் விழுந்து, ‘எங்களை காப்பாற்றுங்கள். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என கதறி அழுதார். அவருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்