Army camp in Bhutan: China is poison again | பூட்டானில் ராணுவ முகாம்: சீனா மீண்டும் விஷமம்

புதுடில்லி, நம் அண்டை நாடான பூட்டானுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக சீனா பேச்சு நடத்தி வருகிறது. அதே நேரத்தில், பூட்டானின் எல்லையில் தனியாக கிராமத்தையும், ராணுவ முகாம்களையும் சீனா அமைத்து வருகிறது.

நம் நாடு ஒரு பக்கம் சீனாவுடனும், மற்றொரு பக்கம் பூட்டானுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. கடந்த, 2017ல் பூட்டானின் டோக்லாம் பகுதியை கைப்பற்ற சீனா முயன்றது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து, அங்கு படைகளை குவித்தது. இந்த பகுதி, மூன்று நாடுகளும் இணையும் இடத்தில் உள்ளது.

கட்டுமான பணி

டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றினால், நம் நாட்டின் எல்லைக்குள்ளும் ஊடுருவுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படும்.

இந்நிலையில், பூட்டானும், சீனாவும், நீண்டகாலமாக உள்ள எல்லை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான பேச்சும் துவங்கியுள்ளது.

இந்நிலையில், வடக்கு பூட்டானின் ஜாகர்லாங்க் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா அசுர வேகத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதைத் தவிர, தன் ராணுவ முகாமையும் சீனா உருவாக்கி வருகிறது.

கடந்த, 2021 அக்டோபரில் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களில் இந்த இடம் காலியாக இருந்தது. தற்போது இந்தக் கட்டடங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது, அசுர வேகத்தில் சீனா அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பு

ஒரு காலத்தில் தங்களுடைய மேய்ச்சல் பகுதியாக இந்த பகுதிகள் இருந்ததாகக் கூறி, சீனா அதை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், எல்லை பிரச்னை தொடர்பான பேச்சில், சீனா விதிக்கும் நிபந்தனைகளை, கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் பூட்டான் உள்ளதாக, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பகுதி, நம் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ளது. அதனால், எதிர்காலத்தில் நம் நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.