மும்பை :கடன் தள்ளுபடி குறித்து, அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளி வரும் தவறான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கடன் பெற்றுள்ள பொதுமக்களுக்கு, அவர்கள் வாங்கிய கடன்களில் தள்ளுபடி பெற்று தருவதாக கூறி, சில நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவது குறித்த செய்தி, ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. மேலும், இந்நிறுவனங்கள் இது போன்ற பல பிரசாரங்களை தீவிரமாக அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது.
இத்தகைய நிறுவனங்கள் எந்த அதிகாரமும் இல்லாமல், ‘கடன் தள்ளுபடி சான்றிதழ்’களை வழங்குவதற்காக சேவை மற்றும் சட்ட ஆலோசனை கட்டணங்களை வசூலிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. சில இடங்களில், கடன் சலுகைகள் தொடர்பான பிரசாரங்களும் சில நபர்களால் நடத்தப்படுகின்றன.வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த தேவையில்லை என்று இந்த நிறுவனங்கள் தவறாக பொதுமக்களிடம் சித்தரிக்கின்றன.
இதனால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதுடன், வங்கியில் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நலனையும் சிதைத்து விடுகிறது.
எனவே, பொதுமக்கள் தவறான பிரசாரங்களுக்கு இரையாக வேண்டாம். மேலும், இத்தகைய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வது, நேரடி நிதியிழப்புகளை ஏற்படுத்தும். இதுபோன்ற நிறுவனங்கள் குறித்து சட்ட அமலாக்க துறைகளுக்கு புகாரளிக்குமாறு, பொதுமக்களை இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement