‘கே.ஜி.எஃப்’ இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள ‘சலார்’ திரைப்படம் இந்த மாத இறுதியில் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகவுள்ளது.
பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே கிளப்பிவிட்டிருக்கிறது. இப்படத்தில் தேவாவாக பிரபாஸும், வரதாவாக பிரித்விராஜும் நெருங்கிய நண்பர்களாகவும், பெரும் அதிகாரத்தைக் கைப்பற்ற எதிரிகளை துவம்சம் செய்யும் இருபெரும் அசாத்திய ஹீரோக்களாகவும், எதிரிகளாகவும் நடித்துள்ளனர்.
இதற்கிடையில் இப்படத்தின் கதை குறித்துப் பேட்டியளித்திருந்த இயக்குநர் பிரசாந்த் நீல், “‘சலார்’ நட்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம். இரண்டு நண்பர்கள் எப்படி எதிரிகளாக மாறுகிறார்கள் என்பதுதான் கதை. இவர்களின் பயணத்தை இரண்டு பாகங்களாகக் காட்டப் போகிறோம்” என்று கூறி எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பிரித்விராஜ் தனது எக்ஸ் தளத்தில், “டப்பிங் பணிகள், திருத்தங்கள் எல்லாம் நிறைவடைந்தது. பல ஆண்டுகளாகப் பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்துள்ளேன். அந்த அனுபவத்தின் மூலம் தற்போது ‘சலார்’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு எனது சொந்தக் குரலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் டப்பிங் செய்துள்ளேன். ஒரு கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் டப்பிங் செய்வது எனக்கு இதுவே முதல்முறை. என்ன ஒரு படம்! டிசம்பர் 22, 2023 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேவாவும் வரதாவும் உங்களைச் சந்திப்பார்கள்!” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.