புதுடில்லி: சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தானின் சில முக்கிய தலைவர்களை மீது உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி, கனடாவுக்கு இந்தியா ரகசிய தகவல் அனுப்பியதாக வெளியான செய்தியை, நம் வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இணைய செய்தி நிறுவனமான, ‘த இன்டர்செப்ட்’ செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. நிஜ்ஜார் உட்பட முக்கிய சீக்கிய பிரிவினைவாதிகள் மீது, உறுதியான சில நடவடிக்கைகளை எடுக்கும்படி, கடந்த மே மாதம், கனடா அரசுக்கு இந்திய அரசு ரகசிய தகவல் அனுப்பியது என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறியதாவது: இது முழுக்க முழுக்க பொய்யான, ஜோடிக்கப்பட்ட கற்பனையாகும். இந்தியாவுக்கு எதிராக பொய்ச் செய்திகளை வெளியிடுவதை இயக்கமாக செயல்படுத்துவோரின் அடுத்த முயற்சி இதுவாகும்.
இந்த குறிப்பிட்ட இணைய செய்தி நிறுவனம், பாகிஸ்தானுக்கு ஆதரவானது என்பது உலகுக்கு தெரியும். இந்த நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு, பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதும் ஏற்கனவே நிரூபிக்கபட்டுள்ளது.
இதுபோன்ற பொய் செய்திகளை வெளியிட்டு, தங்களுடைய நம்பகத்தன்மையை அவர்கள் நிரூபித்துள்ளனர். இது முழுக்க முழுக்க பொய் செய்தி. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் பெயர் திருத்தம்!
மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கர வாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு நம் நாட்டில் தடை விதிக்கப்படுமா என, சமீபத்தில் லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி பதிலளித்துள்ளதாக, லோக்சபாவில் பதிவாகியுள்ளது. ஆனால், இதுபோன்ற பதில் எதற்கும் தான் ஒப்புதல் அளிக்கவில்லை என, மீனாட்சி லேகி குறிப்பிட்டார்.
மற்றொரு இணையமைச்சர் முரளீதரனின் பெயருக்கு பதிலாக மீனாட்சி லேகியின் பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தத் தவறு தற்போது திருத்தப்பட்டுள்ளதாக, வெளியுறவுத் துறை நேற்று தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்