அஜித்தின் `விடா முயற்சி’ படப்பிடிப்பு வெளிநாட்டில் மீண்டும் டேக் ஆஃப் ஆகியிருக்கிறது. எதிர்பார்ப்புகளுடன் அஜர்பைஜானில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியிருப்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.
‘தடம்’, ‘கலகத்தலைவன்’ படங்களின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. இதில் வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார். ‘கே.ஜி.எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பின், சஞ்சத் தத் தென்னிந்திய நடிகர் போல ஆகிவிட்டார். விஜய்யின் ‘லியோ’விலும் கவனம் ஈர்த்தார். இப்போது விடாமுயற்சியில் வித்தியாசமான அவதாரமெடுக்கிறார் என்கிறார்கள். படத்தில் அவர் தவிர, ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா எனத் தெரிந்த முகங்கள் பலர் நடித்து வருகின்றனர். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த கலவையாக படம் உருவாகி வருகிறது.
அஜர்பைஜான் நாட்டில் தொடங்கிய படப்பிடிப்பு அங்கே தொடர்ந்து 50 நாட்கள் ஒரே ஷெட்யூலாக நடத்தத் திட்டமிட்டனர். கடந்த தீபாவளியைக்கூட, கொண்டாட சென்னை வரவில்லை. ஆனால், தீபாவளி கடந்த பின், படக்குழுவுக்கு சின்னதொரு பிரேக் தேவைப்பட, சென்னை திரும்பினார்கள். இப்போது படக்குழு மீண்டும் வெளிநாடு திரும்பியிருக்கிறது. ‘கங்குவா’ பட டீமிற்கும், ‘விடா முயற்சி’ டீமுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு படங்களுக்கும் கலை இயக்குநர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் என ஒரே டீம்தான். அஜர்பைஜானில் சுப்ரீம் சுந்தரின் சீறிப் பாயும் ஸ்டண்ட்களும், பரபரப்பான சேஸிங் சீன்களும் படமாக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் அஜர்பைஜானிலேயே படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
இந்தக் கதை ரோடு ஆக்ஷன் த்ரில்லர் என்றும் பேச்சு இருக்கிறது. இப்போது அஜித், த்ரிஷா, ரெஜினா காம்பினேஷன் காட்சிகள் நடந்து வருகின்றன. படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷாவை சில சூழல்கள் காரணமாக மாற்றியுள்ளனர். இந்த ஷெட்யூலில் இருந்து ‘அறம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்கிறார்கள்.
இவர் அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தில் பணியாற்றியிருக்கிறார். படக்குழு இந்த முறை சென்னை வந்தபோது, ஏற்கெனவே படமாக்கிய காட்சிகளைப் பார்த்ததுடன், சில காட்சிகளை மீண்டும் கூடுதல் நேர்த்தியுடன் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வருகின்றன.
இந்த வெளிநாட்டு ஷெட்யூலுடன் பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடையும் என்றும், அஜித்தின் பிறந்த நாளில் படத்தைக் கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றும் சொல்கிறார்கள். இன்னொரு விஷயம், அஜர்பைஜானில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் அஜித், சைக்கிளிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.