பெங்களூரு: ”கிட்டத்தட்ட, 2,000 ஆண்டுகளை கடந்தும், தமிழ் எழுத்தும், பேச்சும் மாறாமல் இருப்பதால், தமிழர் என்று நாம் கர்வத்துடன் சொல்ல வேண்டும்,” என, வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் கூறினார்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு பெங்களூரு தமிழ் புத்தக கண்காட்சி, கடந்த 1ம் தேதி துவங்கியது. ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், விஞ்ஞானிகள், தமிழ் ஆர்வலர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 10 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. வார விடுமுறை நாள் என்பதால், காலையில் இருந்தே புத்தக கண்காட்சியில் கூட்டம் அலைமோதியது.
இறுதி நாளான நேற்று மதியம் 3:00 முதல் 4:00 மணி வரை சிலம்பாட்டம் நடந்தது. ஷிவமொகாவில் இருந்து வந்த 65 வயது மூர்த்தி என்பவரும் சிலம்பம் சுற்றி அசத்தினார்.
தமிழும் ஒன்று
நிறைவு நாளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:
பெங்களூரில் தமிழ் புத்தக திருவிழா நடத்தும், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். தொடர்ந்து புத்தக கண்காட்சி நடத்தப்பட வேண்டும். உலகில் 7,100 மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் முக்கிய மொழிகள் 121. அரசியல் சட்டத்தில் 12 மொழிகளை அங்கீகரித்து உள்ளோம். 2,000 ஆண்டுகளை கடந்தது ஏழு மொழிகள். அதில் இந்தியாவில் தமிழும், சமஸ்கிருதமும் ஒன்று.
தற்போது சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. எழுத்தும், பேச்சும் மாறாமல் அப்படியே இருப்பது, தமிழ் மொழி மட்டும் தான். இதனால் நாம் கர்வத்துடன் சொல்லலாம், தமிழர் என்று. தமிழகத்தில் பிறக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழை போற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும். நமது நாடு கல்வியில் மேம்பட வேண்டும்.
நாம் உயர்கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளோம். நமது நாட்டில் 27 சதவீதம் பேருக்கு தான், உயர்கல்வி கிடைக்கிறது. ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்ட பின்னர் தான், ஒடிசாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு மின்சாரம் கிடைத்தது என்று செய்தி வேதனையாக இருந்தது.
இதற்கு அடிப்படை காரணம், அந்த ஊரில் யாரும் உயர்கல்வி படிக்காதது தான். உயர்கல்வி படிக்காதவர்களுக்கு, நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. உயர்கல்வி வழங்குவதில் தமிழகம் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது. 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாயம் உயர்கல்வி படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
தமிழ் ஆளுமை விருது
இதையடுத்து, அறிஞர் குணாவுக்கு தமிழ் பெருந்தகை விருதும், இளங்கோவன், ராமசாமி, கலையரசன், பிரான்சிஸ் போர்ஜோ, வின்சென்ட் ஜோசப், மணிவண்ணன், விட்டல் ராவ், நல்லதம்பி, தாமோதரன், தண்டபாணி, லட்சுமிபதி, பசவராஜ், மாறன், நாம்தேவ்.
அருள்தந்தை ஜெரால்டு வளவன், அருள்தந்தை ஆரோக்கியநாதன், ராம.இளங்கோவன், முகமது காசிம், கார்த்தியாயினி, சன்ரைஸ் நரசிம்மன், அரிமா மோகன், எட்வின்குமார், அமுதன், மதுசூதனபாபு, ராமசந்திரன் ஆகிய 25 பேருக்கு தமிழ் ஆளுமை விருதும் வழங்கப்பட்டது.
துாய அல்போன்சியார் ஆரம்ப பள்ளிக்கும், எஸ்.வி.சி.கே., குளுனி கான்வென்ட் மேல்நிலைப் பள்ளிக்கும் கர்நாடகா சீர்மிகு செந்தமிழ் பள்ளி விருது வழங்கப்பட்டது. ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., – பி.யு.சி., கல்லுாரி, பெங்களூரு மாநகராட்சி பி.யு.சி., கல்லுாரி.
புனித ஜோசப் பல்கலைக் கழகத்திற்கு கர்நாடகா சீர்மிகு செந்தமிழ் கல்லுாரி விருது வழங்கப்பட்டது. 10 நாட்கள் நடந்த புத்தக கண்காட்சியில், 10,000 பேர் வரை பங்கேற்றனர்.
ஓவியத்தில் அசத்தும் கிருஷ்ணகிரி சிறுவன்
தமிழகத்தின் கிருஷ்ணகிரி பழைய ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் கதிர்வேல். கிருஷ்ணகிரி அரசு இசைப் பள்ளியில் தேவார ஆசிரியர். இவரது மனைவி கவிதாபாய், குருபரபள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியை. இந்த தம்பதியின் மகன் கவிவேலன், 13. அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.இவர் ஆறு மாத குழந்தையாக இருந்த போதே, வீட்டின் சுவரில் பென்சிலை வைத்து ஓவியம் வரைந்து உள்ளார். வளர ஆரம்பித்ததும், ஓவியத்தில் அதிக ஆர்வம் காட்டினார்.
ஒரு நபரை பார்த்து அவரது படத்தை பத்து நிமிடங்களில் வரைந்து விடுகிறார். காமராஜர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்டோரின் படங்களை வரைந்து அசத்தி உள்ளார்.கலாம் வேல்டு ரெக்கார்டு, அப்துல்கலாம் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி அசத்தி உள்ளார். தமிழ் புத்தக திருவிழாவில் நேற்று குடும்பத்துடன் பங்கேற்றார். இவரது திறமை பற்றி அறிந்த, ‘இஸ்ரோ’ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சால்லை அணிவித்து, 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்