சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, தெற்கு அம்பலம் தெருவைச் சேர்ந்தவர் ஆஷிக் (25). இவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து அங்கப்பன் நாயக்கன் தெருவிலுள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி சென்னை ஆர்மேனியன் தெருவில் வசிக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தன்னுடைய நண்பனான முகமது இப்ராஹிமைச் சந்திக்க ஆஷிக் சென்றார். பின்னர் அவர் தன்னுடைய விடுதிக்கு வந்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் முகமது இப்ராஹிம் அறையில் வைக்கப்பட்டிருந்த 2,50,000 ரூபாய் காணாமல்போனது. அதனால் அறைக்கு வந்தவர்களிடம் முகமது இப்ராஹிம் விசாரித்தனர். அதைப்போல நண்பனான ஆஷிக்கிடமும் முகமது இப்ராஹிம் விசாரித்திருக்கிறார். அப்போது, தான் பணத்தை எடுக்கவில்லை என ஆஷிக் கூறியிருக்கிறார். ஆனால் அதை நம்பாத முகமது இப்ராஹிம், தன்னுடைய நண்பர்கள் மூலம் ஆஷிக்கை பைக்கில் கடத்திச் சென்று ஓர் அறையில் அடைத்துவைத்து, சித்ரவதை செய்திருக்கிறார். ஆஷிக்கின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், கடத்தல் கும்பலிடமிருந்து ஆஷிக்கை மீட்டனர். பின்னர் அவர் அளித்த தகவலின்படி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (34), ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த முகமது நஜிமுதீன் (36), அதிப் (19) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர். இந்தக் கடத்தல் வழக்கு தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.