தூத்துக்குடியில் புற துறைமுகத் திட்டம்: கனிமொழி எம்.பி கேள்விக்கான பதிலில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது புற துறைமுகத் திட்டம் அமலாக்கப்படுகிறது என்ற தகவலை திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்தடங்கள் துறையின் அமைச்சர் சர்பாணந்த் சோனோவால் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப்பொதுச் செயலாளரும், மக்களவைக்குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி எழுப்பியக் கேள்வியில், ‘தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் மையமாக மேம்படுத்த மற்றும் விரிவாக்கத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? ஒதுக்கப்பட இருக்கிற நிதி விவரங்கள் என்ன? தூத்துக்குடி வஉசி துறைமுக பசுமை ஹைட்ரஜன் மைய (Green hydrogen hub) மேம்பாட்டின் ஒரு பகுதியான உத்தேசிக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு மற்றும் பிற விரிவாக்கச் செயல்பாடுகள் என்னென்ன? தூத்துக்குடி துறைமுகத்தை பல நீண்ட தூர கப்பல் வழித்தடங்களுக்கு இடையே பரிமாற்ற புள்ளியாக (The transhipment hub) தரம் உயர்த்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?’ எனக் கேட்டிருந்தார்.

இக்கேள்விகளுக்கு மத்தியத் துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பாணந்த் சோனோவால் அளித்த பதிலில், ‘தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் மையமாக மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துக்கு முன்மொழியப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தின் இத்தகைய மேம்படுத்துதலில் பசுமை ஹைட்ரஜன்/ பச்சை அம்மோனியா சேமிப்பு வசதிகள், உப்புநீக்கும் ஆலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காரிடார், ஜெட்டி எனப்படும் படகுத் துறைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அடங்கும்.

தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் வகையில் மேலும், மெகா கன்டெய்னர் கலன்களை கையாளும் திறன் கொண்ட இரு கன்டெய்னர் முனையங்களை அமைக்க பொதுத்துறை – தனியார் பங்களிப்பு வகையில் புற துறைமுகத் திட்டம் தற்போது தயாராகி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.