புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அத்துமீறியவர்களில் ஒருவரான அமோல் ஷிண்டே ராணுவத்தில் சேர விரும்பியவர் என்பது அவரது பெற்றோர் மூலம் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம் நவகுந்தாரி கிராமத்தை சேர்ந்தவர் அமோல் ஷிண்டே. பிஏ பட்டதாரியான அமோலின் குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது. இந்திய ராணுவம் அல்லது மகாராஷ்டிர காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்பியவர். கடந்த டிசம்பர் 9-ம் தேதி ராணுவத்தின் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டேவின் (25) பெற்றோர் கூறியது: “எங்களது மகன் அமோல் ஷிண்டே ராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்காக பணியாற்ற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அசாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்களுக்கு அடிக்கடி சென்று வருவார். வேலையில்லாத நேரத்தில் தினசரி கூலித் தொழிலாளியாகவும் அவர் பணியாற்றி வந்தார். மேலும் படிக்க வேண்டும் என்று விரும்பிய அன்மோல் மாதம் ரூ.4,000 வேண்டும் என கேட்டார். ஆனால், அதை எங்களால் கொடுக்க முடியவில்லை. அன்மோல் கைதான பிறகு எங்களது வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் அவரது விளையாட்டு சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளனர்” என்றனர்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த நீலம் என்பவருடன் சேர்ந்து அன்மோல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, “சர்வாதிகாரத்தை அனுமதிக்க முடியாது, பாரத் மாதா கி ஜே, ஜெய் பீம், ஜெய் பாரத்” போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். மற்றவர்களின் பின்னணிக்கு > நாடாளுமன்ற அத்துமீறலுக்கு திட்டமிட்ட 6 பேர் யார்?
‘பகத் சிங் ஃபேன் கிளப்’ – நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பே சதித் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம், அமோல் ஷிண்டே, விஷால் சர்மா, லலித் ஜா ஆகிய 6 பேரும் ‘பகத் சிங் பேன் கிளப்’ என்ற சமூகவலைதளத்தின் மூலம் நண்பர்களாகி உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 6 பேரும் கர்நாடகாவின் மைசூருவில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மீண்டும் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசித்து உள்ளனர்.
புதிய நாடாளுமன்றத்தின் தொடக்க நாளின்போதே வண்ண புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளராக நுழைய அனுமதி சீட்டு கிடைக்காததால் அன்றைய தினம் தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டது. கடந்த டிசம்பர் 10-ம் தேதி 6 பேரும் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். அன்றைய தினம் சதித் திட்டம் இறுதி செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வண்ண புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.தாக்குதலை நடத்துவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாக சோதனை நடைமுறைகளை இவர்கள் உன்னிப்பாக நோட்டம் பார்த்துள்ளனர். அப்போது காலில் அணிந்திருக்கும் ஷூக்கள் பரிசோதனை செய்யப்படுவது இல்லை என்பது அறிந்து, ஷூக்கள் மூலம் வண்ண புகை குப்பிகளை கடத்திச் சென்றுள்ளனர்” என்றனர்.