வேலூர்: பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவு நீர்மட்டத்தை உயர்த்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு , நடப்பாண்டுக்கான கரும்பு அரவை பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கூறும்போது, ‘‘சென்னையைச் சுற்றி நீர் நிலைகளை உருவாக்க தமிழக அரசு நீண்ட காலமாக ஆலோசித்து வருகிறது. ராமனஞ்சேரியில் மிகப்பெரிய தடுப்பணை கட்ட ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால், அங்குள்ள மக்கள் போதிய அளவு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
மற்றொரு இடமாக திருக்கழுக்குன்றம் ஏரியில் கடந்த ஆட்சியாளர்கள் தடுப்பணைகள் கட்ட முயற்சி செய்தும் முடியவில்லை. எனவே, சென்னை சுற்றியுள்ள பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் ஒரு அடி அளவுக்கு கொள்ளளவு நீர்மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு அறிக்கையின்படி அதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். சென்னை சுற்றியுள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள பகுதிகள் அதிகளவில் அகற்றப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பட்சத்தில் அரசியல் தலையீடும் உள்ளது. எந்தளவுக்கு துணிவு இருந்தால் நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் கீழே குதித்து புகை குண்டுகளை வீசி இருப்பார்கள். இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை உயர்த்தி வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார்’’ என்றார். அப்போது, அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.