‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வெற்றியைக் குவித்து, தற்போது ஓடிடியிலும் ரிலீஸாகி மீண்டும் பேசுபொருள் ஆகியிருக்கிறது. குறிப்பாக, முதல்வராக நடித்த சிந்தாமணி கதாப்பாத்திரம் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அப்படியே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வைத்து வடிவமைக்கப்பட்ட கதாப்பாத்திரம் என்று சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். ‘யார் இந்த லேடி?’ என ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், படத்தில் முதல்வர் சிந்தாமணியாக கவனம் ஈர்த்த கபிலா வேணுவிடம் பேசினேன்.
”என்னுடைய சொந்த ஊரு கேரளா திருச்சூர். ஆனா, பொறந்து வளர்ந்தது எல்லாமே ஊட்டியில்தான். லாரன்ஸ் ஸ்கூலில்தான் ப்ளஸ் டூ வரை படிச்சேன். தமிழ் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் பேச வரும், ஆனா எழுத வராது. எழுதவும் கத்துக்கிட்டிருக்கேன். ஃபேஸிக்கலி நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். கேரளாவின் பாரம்பரியமான குடியாட்டம் கலை பயிற்சியாளராகவும் டான்ஸராகவும் இருக்கேன். எங்கம்மா மோகினியாட்டம் டான்ஸர். எங்கப்பா, குடியாட்டம் டான்ஸர். நான், ஒரே பொண்ணு. இயல்பிலேயே எனக்கும் நடனத்தின் மீது ஆர்வம் வந்துடுச்சு. என் கணவர் புகைப்படக் கலைஞரா இருக்கார். ஒரு மகனும் இருக்கிறார். இப்போ, ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்காக என் கேரக்டர் பேசப்படுறதுல ரெண்டு பேருக்குமே ரொம்ப சந்தோஷம்.
இதுக்கு முன்னாடி குடியாட்டத்தை மையப்படுத்திய ஆங்கிலப் படத்திலும் நடிச்சிருக்கேன். சினிமான்னு பார்த்தா என் நடிப்புல வெளியான முதல் படம் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’தான். ஆனா, இதுக்கு முன்னாடியே கார்த்திக் சுப்புராஜ் சாரோட ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்புல சோமிதரன் சார் இயக்கிட்டிருக்க படத்துல நடிச்சிருக்கேன். இன்னும் அந்தப் படம் வெளியாகல. அந்த பட ஷூட்டிங்குலதான் கார்த்திக் சுப்புராஜ் சார் என்னை பார்த்துட்டு ’ஜிகர்தண்டா 2’ படத்துல புக் பண்ணிட்டார். ’முதல்வர் கேரக்டர்ல பண்ணனும்… டபுள் ஷேட் கேரக்டர், ரொம்ப ஸ்ட்ராங்கான கேரக்டர். நல்லா பண்ணுங்க’ அப்படின்னு சொன்னாரு. எனக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க. மொத்தம் ஏழு எட்டு நாள் ஷூட்டிங் இருந்துச்சு.
மிக முக்கியமா செருப்பால அடிக்கிற காட்சியில எனக்கு ரொம்ப தயக்கமா இருந்துச்சு. ஆனா, இளவரசு சார் இதெல்லாம் நடிப்புதானம்மா கேஷுவலா பண்ணுங்க அப்படின்னு என்கரேஜ் பண்ணினார். நானும் ஒரிஜினலாவே செருப்பால அடிச்சுட்டேன். அதுவும் கன்னா பின்னான்னு அடிச்சுட்டேன். அதுக்கப்புறம், அவரோட காலில் விழுந்து வணங்கிட்டேன். அதேமாதிரி, நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் செருப்பால அடிக்கும்போது கன்னா பின்னான்னு அடிச்சுட்டேன். அவங்கள்லாம் பெரிய நடிகர்கள். பெரிய பெரிய படங்களில் நடிச்சிருக்காங்க. ஆனா, எனக்கு இதுதான் முதல் படம். அவங்க இந்த செருப்பால அடிச்சதையெல்லாம் பெரிசா எடுத்துக்கல. நடிப்புதானேன்னு கேஷுவலா இருந்தாங்க.
எனக்கு அப்படி இல்ல. ரொம்ப பதட்டமாவும் தயக்கமாவும் இருந்தது. ஆனா, கார்த்திக் சுப்புராஜ் சார் என்கரேஜ் பண்ணி நல்லா நடிக்க வெச்சுட்டாரு. பல ஆங்கிளில் இந்தக் காட்சியை எடுத்தாங்க. இந்தப்படத்துக்கு நானேதான் டப்பிங் பேசினேன். படத்தை பார்த்துட்டு எல்லோரும் பாராட்டுறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்பவரிடம், ”உங்கக் கேரக்டர் ஜெயலலிதாவை பார்த்த மாதிரியே இருக்குன்னு சொல்றாங்களே, எப்படி தைரியமா நடிச்சீங்க? என்று கேட்டபோது,
“கார்த்திக் சுப்புராஜ் சார் சொல்லும்போது இது ஜெயலலிதா மேடம் மாதிரி கேரக்டர்ன்னு எதுவும் சொல்லல. ஜெயலலிதா ஒரு கிரேட் பெண்மணி. படம் பார்த்தவங்க ஜெயலலிதா மேடம் மாதிரியே கொஞ்சம் இருக்குன்னு சொல்றாங்க. அது இல்லைன்னு சொல்லிட முடியாது. ஆனா, நான் மம்தா பானர்ஜியைதான் உதாரணமா எடுத்துக்கிட்டேன். என்னை மாதிரியே ஒவ்வொரு கேரக்டருக்கும் ரெஃபரன்ஸ் இருக்கு. ஜெயலலிதா மேடம்னு நாங்க நினைச்சு எடுக்கல. கார்த்திக் சாரும் அப்படி சொல்லல. இந்தியாவுல நிறை முதல்வர்கள் இருக்காங்க. அதனால, இது ஜெயலலிதா மேடம்னு எடுத்துக்க வேண்டாம். நான் தான் இந்தக் கேரக்டர் பண்ணேன்னு என்னை அடையாளமே யாருக்கும் தெரியலைங்குறாங்க. அந்த கேரக்ட்ராவே நான் பேசப்படுறது ரொம்ப சந்தோஷம்” என்கிறார் மகிழ்ச்சி பொங்க.