புதுடில்லி, பார்லிமென்ட் உள்ளே குழல் வாயிலாக வண்ண புகையை வீசிய நபர்களில் ஒருவரான மனோரஞ்சனின் தந்தை கேட்டுக் கொண்டதை அடுத்து, அவரது மகனுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டதாக, மைசூரு பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா, 42, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று விளக்கம் அளித்தார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தபோது, லோக்சபா உள்ளேயும், வெளியேயும் குழல் வாயிலாக வண்ண புகையை வீசி கோஷங்களை எழுப்பி அத்துமீறலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக்சபாவின் பார்வையாளர் மாடத்துக்குள் நுழைந்து சபை நடவடிக்கைகளை பார்வையிட, எம்.பி.,க்களிடம் இருந்து அனுமதி சீட்டு பெற வேண்டியது அவசியம்.
சபைக்குள் நுழைந்த இருவரில் ஒருவர், கர்நாடகாவின் மைசூரு பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹாவிடம் இருந்து அனுமதி சீட்டு பெற்றது தெரிய வந்தது.
குற்றவாளியின் பின்புலம் தெரியாமல், முழுமையான பாதுகாப்பு சோதனைகள் செய்யாமல் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ள தாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து, மைசூரு எம்.பி., பிரதாப் சிம்ஹா நேற்று விளக்கம் அளித்தார்.
அத்துமீறலில் ஈடுபட்ட மனோரஞ்சனின் தந்தை தன்னை அணுகி, அவரது மகன் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை சுற்றிப் பார்க்க உதவும்படி கோரிக்கை விடுத்ததாகவும், அதன் அடிப்படையில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
அனுமதி சீட்டு பெறுவதற்காக, எம்.பி.,யின் உதவியாளர் மற்றும் அவரது அலுவலகத்தை, மனோரஞ்சன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
மைசூரு பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா, பத்திரிகையாளராக பணியாற்றியவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்