அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், முதல்முறையாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி, அடுத்த மாதம் நடப்பதால், அதற்கு முன்பு விமான நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அயோத்திக்கான முதல் விமானம், டெல்லியில் இருந்து 30-ந் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, காலை 11.20 மணிக்கு அயோத்தி விமான நிலையத்தில் தரை இறங்குகிறது.
விமான நிலைய திறப்புக்கு பிறகு, பிரதமர் மோடி வாகன பேரணியாக மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அதை பிரதமர் திறந்து வைக்கிறார். வந்தே பாரத், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அயோத்தி ரெயில் நிலையம்-விமான நிலையம் இடையே 5 கி.மீ. நீள மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர், மீண்டும் அயோத்தி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். வழியில், 51 இடங்களில் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறவிகளும், சாதுக்களும் பிரதமருக்கு ஆசி வழங்குவார்கள். அயோத்தி விமான நிலையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.