அருப்புக்கோட்டை: கனமழையால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட காரணமே ஆக்கிரமிப்புகள்தான் என்றும், விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கப்படும் என்றும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7,000 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தம் கிராமத்தில் பயிர் சேதம் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில், அதிகாரிகளுடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, பயிர் சேதம் குறித்து விவசாயிகள் பலரும் அமைச்சரிடம் மனுக்கள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறும்போது, “தமிழகம் முழுவதும் காட்டுப் பன்றி பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் தெரிவித்துள்ளோம். விரைவில் இதற்கான தீர்வு எடுக்கப்படும். கடந்த வாரம் பெய்த கனமழையானது விருதுநகர் மாவட்டத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்மாய்கள் உடைந்திருக்கின்றன. பயிர்கள் சேதமடைந்துள்ளன. நெல், உளுந்து, பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. பயிர் சேதம் அடைந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியருடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் மட்டும் 15,000 ஹெக்டேர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 7,000 ஏக்கர் மழையால் சேதம் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான கணக்கீட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். விரைவில் முதல்வர் நஷ்டஈடு வழங்கவுள்ளார். விவசாயிகள் பாதிப்பு, பயிர் சேதம் குறித்து கணக்கிட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடித்துவிட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பயிர்க் காப்பீடு நிறுவனம் வழங்கும் இழப்பீடு வேறு, தமிழக அரசு வழங்கும் இழப்பீடு வேறு.
ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் ஆக்கிரமிப்பை எடுக்க வேண்டும் என்றார்கள். சிலர் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் ஒத்திருந்தால் ஆக்கிரமிப்பை எடுப்பது பெரிய காரியம் இல்லை. இவ்வளவு பெரிய சேதத்துக்குக் காரணமே ஆக்கிரமிப்புகள்தான். விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடங்குவோம்” என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் வருவாய்த் துறை, வேளாண்துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.