பெத்லகேம்,
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, இனிப்புகளை பகிர்ந்து, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தைனைகளில் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இயேசு கிறிஸ்து பிறந்த இடமாக கிறிஸ்தவர்களால் நம்பப்படும் பெத்லகேம் நகரில் இந்த ஆண்டு வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக அங்குள்ள பாலஸ்தீன கிறிஸ்தவர்கள், காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மெழுவர்த்தி ஏந்தி, அமைதிக்கான பிரார்த்தனைகளை நடத்தினர்.
இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில் உள்ள மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவர். ஒவ்வொரு ஆண்டும் பெத்லகேம் நகரில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்பட்டு கோலாகலமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும்.
ஆனால் இந்த ஆண்டு காசா மக்களின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெத்லகேம் நகரில் உள்ள பாலஸ்தீன கிறிஸ்தவர்கள், வழக்கமான கொண்டாட்டங்களை புறந்தள்ளிவிட்டு அமைதியான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.