கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் இணைந்து நவகேரள சதஸ் யாத்திரை மேற்கொண்டனர். காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை சொகுசு பஸ்ஸில் நடைபெற்ற நவகேரள சதஸ் யாத்திரையை வரவேற்கும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்துவதாக ஆரம்பத்தில் பிரச்னை எழுந்தது. இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றதை அடுத்து நவகேரள சதஸில் மாணவர்களை பயன்படுத்தக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. மேலும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் வலுக்கட்டாயமாக நவகேரள சதஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. நவகேரள சதஸ் நிகழ்ச்சிக்காக அரசு அதிகாரிகள் மூலம் பணம் வசூல் செய்யப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடந்த நவகேரள சதஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத ஆட்டோ டிரைவரை ரஜனியை, ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டக்கூடாது என சி.பி.எம் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு விலக்கி வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. இத்தனைக்கும் அந்தப் பெண் சி.ஐ.டி.யு உறுபினராகவும், சி.பி.எம் நிர்வாகியாகவும் இருந்தும் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் காட்டாயிகோணம் ஜங்சன் ஆட்டோ ஸ்டாண்டில், கடந்த 8 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் ரஜனி, சி.ஐ.டி.யு யூனியனில் உறுப்பினராக உள்ளார். சி.பி.எம் காட்டாயினோணம் கமிட்டி உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் களக்கூட்டத்தில் நடந்த நவகேரள சதஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காட்டாயிகோணம் சி.ஐ.டி.யு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு வந்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ரஜனி கலந்துகொள்ளவில்லை. மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதையடுத்து காட்டாயிகோணம் ஜங்சனில் ஆட்டோ ஓட்டக்கூடாது என ரஜனியை விலக்கி வைத்து சி.ஐ.டி.யு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். மேலும், அவரை ஆட்டோ ஓட்டக்கூடாது என ஸ்டாண்டில் இருந்து விரட்டும் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ரஜனி கூறுகையில், “நான் 10-ம் வகுப்புவரை படித்துள்ளேன். குடும்ப வறுமை காரணமாக நான் ஒரு கடைக்கு வேலைக்குப் போனேன். குழந்தையை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விருப்பப்பட்டு ஆட்டோ ஓட்டும் பணியை கையில் எடுத்தேன். எங்கள் ஸ்டாண்டில் நான் உள்ப்பட 2 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளோம். உடல்நிலை சரியில்லை என்பதால் நான் நேற்று முன்தினம் நடந்த நவகேரள சதஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று ஆட்டோ ஸ்டாண்டுக்குச் சென்ற சமயத்தில், அடுத்த கமிட்டி கூடிய பின்பு அதில் முடிவு செய்யும்வரை ஆட்டோ ஓட்டக்கூடாது என பொறுப்பாளர்கள் கூறினர். வழக்கமாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தால் ஒரு வாரமோ, சில நாள்களோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டக்கூடாது என கட்டுப்பாடு விதிப்பது வழக்கமான நடைமுறைதான். ஆனால் அடுத்த கமிட்டி எப்போது நடக்கும் எனவே தெரியாது. நவகேரள சதஸ் நிகழ்ச்சியில் நான் மட்டும்தான் கலந்துகொள்ளவில்லை. எனவேதான் இனி என்னை ஸ்டாண்டில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்ற முடிவில் என்னிடம் அப்படி கூறி உள்ளனர்.
கணவரின் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பத்தை நடத்த முடியாது என்பதால் ஆட்டோ ஓட்ட வந்துள்ளேன். ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்கு மருந்து வாங்கி கொடுத்துவருகிறேன். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தால், சுமை தூக்கும் தொழிலாளியான என் சகோதரனையும் விலக்கி வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. நான் ஆட்டோ ஓட்ட வழிவகை செய்துதரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
நவகேரள சதஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது குறித்து முன்கூட்டியே ரஜனி தகவல் கூறவில்லை என சி.ஐ.டி.யு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சி.ஐ.டி.யு நிர்வாகிகள் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எதுவும் பேசவில்லை.