தமிழ்நாட்டில் உள்ள 441 பள்ளிகளில் வெவ்வேறு வகையில் சாதியத் தீண்டாமை அரங்கேறி வருவதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தமிழகப் பள்ளிகளில் இருந்துவரும் சாதியப் பாகுபாடுகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 36 மாவட்டங்களில் உள்ள 441 பள்ளிகளில் அதாவது 321 அரசு பள்ளிகள், 58 அரசு உதவிபெறும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகளில் சாதியப் பாகுபாடு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, அந்தப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 644 மாணவர்களிடம், 50 பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் 3 மாதங்களாக ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், 90% பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், 10% பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு, கேட்கப்பட்ட 72 கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கின்றனர்.
அதனடிப்படையில், 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் சாதியத் தீண்டாமை நிலவுவது கண்டறியப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவற்றை பட்டியலிடுகிறோம்.
* 38 பள்ளிகளில் மாணவர்கள் சாதி பெருமை பேசுகிறார்கள்.
* 33 பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர், கைகளில் கயிறு, செயின், பொட்டு, கடுக்கன் அணிந்து வருகை புரிகின்றனர்.
* 23 பள்ளிகளில் மாணவர்கள் சாதி உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்.

*19 பள்ளிகளில் குடிநீர் அருந்த வெவ்வேறு டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* 15 பள்ளிகளில் கழிவறையை சுத்தம் செய்யும் வேலைகளில் பட்டியலின மாணவர்களை ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
* 12 பள்ளிகளில் விளையாட அனுமதிக்கும் நேரங்களில் சாதியப் பாகுபாடு காட்டப்படுகிறது.
* 6 பள்ளிகளில் வரிசையில் நிற்பதில் மாணவர்களிடையே சாதியப் பாகுபாடு இருக்கிறது.
* 4 பள்ளிகளில் மாணவர்கள் சாதிவாரியாகப் பிரிந்து அமர்ந்து உணவு உணவருந்துகிறார்கள்.

* 3 பள்ளிகளில் பட்டியலின மாணவர்கள் ஏதேனும் தவறிழைத்தால் கூடுதல் தண்டனை வழங்கப்படுகிறது.
* ஒரு பள்ளியில் பட்டியலின மாணவர்களை தொடக்கூடாது எனக் கருதும் மாணவர்கள் இருக்கின்றனர்.
* மற்றொரு பள்ளியில் பட்டியலின மாணவர் முதல் மதிப்பெண் எடுத்ததால் பாராட்டு விழாவையே ரத்து செய்த கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.
*மேலும், 156 பள்ளிகளில் ஏதாவது ஒரு வகையில் பட்டியலின மாணவர்கள்மீது சாதியப் பாகுபாடு திணிக்கப்பட்டுவருகிறது. மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்குள்ளாகவும் சாதியத் தீண்டாமை நிலவுகிறது.
இவை தவிர, திருவண்ணாமலை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிகளில் சாதிய மோதல்கள் நடந்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கின்றன. மாணவர்களுக்கிடையே நிலவும் இதுபோன்ற சாதிய உணர்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும், திரைப்படங்களும் காரணம் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசியிருக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல், “தமிழகப் பள்ளிகளில் மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிய மோதல்களைத் தொடர்ந்து, பள்ளிகளில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைக் கண்டறிய கள ஆய்வு நடத்தினோம். அதில், 36 மாவட்டங்களில், 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் சாதியப் பாகுபாடு நிலவுவதை கண்டறிந்திருக்கிறோம். இதுதொடர்பான ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்து, சாதியப் பாகுபாட்டை ஒழிக்க 23 வழிமுறைகளையும் வழங்கவிருக்கிறோம். குறிப்பாக, அரசாங்கம் பள்ளிக்கூடங்களில் நடக்கும் சாதிய பாகுபாடுகளை கண்டறிந்து கவனம் செலுத்த தனி அதிகாரியை நியமிக்க வேண்டும். சமத்துவ கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் சமத்துவப் புகார் பெட்டியை ஒவ்வொரு பள்ளியிலும் வைக்க வேண்டும். அரசே நிதி ஒதுக்கீடு செய்து, சமத்துவ விழாக்களை முன்னெடுக்க வேண்டும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, `பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் சாதி, இன உணர்வு பரவியிருப்பது, எதிர்கால தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய முக்கியப் பிரச்னை’ என்று தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத நல்லிணக்க சூழலை உருவாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து, உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.