புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த 2001-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் நினைவு தினம் டிசம்பர் 13-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது.
அப்போது நாடாளுமன்ற நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் எம்.பி.க்களின் இருக்கையில் எகிறி குதித்து வண்ண புகை குப்பிகளை வீசி எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதேநேரம், நாடாளுமன்றத்துக்கு வெளியே நீலம் மற்றும் அமோல் ஆகிய இருவர் அதேபோன்ற வண்ண புகை குப்பிகளை வீசி கோஷங்களை எழுப்பினர். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அத்துமீறல் சம்பவத்தில் லலித் ஜா என்பவர் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, நாடாளுமன்ற அத்துமீறலில் ஈடுபட பல மாதங்களுக்கு முன்பாகவே அவர்கள் திட்டமிட்டது தெரியவந்தது.
லலித் கடந்த வாரம் டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது லலித் ஜாவின் காவலை மேலும் 14 நாட்களுக்கு அதாவது ஜனவரி 5, 2024 வரை நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.