“நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்துக்கொண்டு பேசியுள்ளார்!" – திருமாவளவன் காட்டம்

தந்தை பெரியாரின் 50 -வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “சமூக நீதியை நிலைநாட்ட தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர் தந்தை பெரியார். விளிம்பு நிலை மக்கள் அதிகார பலம் பெற வேண்டும் என்பதற்காக, தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர். சனாதனமே நமது பகை, அதை வேரறுப்பதன் மூலமே சமத்துவத்தை வென்றெடுக்க முடியும் என உலகிற்கு உணர்த்தியவர். அத்தகைய தந்தை பெரியாரின் அரசியலை நீர்த்துப்போக செய்வதற்கு சில சனாதன சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. தொடர்ந்து, அவருக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். பெரியார் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ, இயக்கத்திற்கோ உரிமையானவர் அல்ல. ஒட்டுமொத்த விளிம்பு நிலை மக்களுக்கும் உரிமையானவர் என்பதை உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து தமது காழ்ப்புணர்வை கக்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களை வீழ்த்துகின்ற முயற்சியில் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய சிந்தனையாளர்கள் ஓரணியில் திரண்டு இருக்கிறோம்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் திருமாவளவன்

அதற்காக, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்கிற பெயரில் சமூக நீதிக்கான போராளிகள் ஒன்றிணைந்திருக்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டியடிப்போம் என பெரியாரின் நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எதேச்சதிகாரமான போக்கில் செயல்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தையும் அவர்கள் மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியதைப் போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றன. சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றும் இந்த கடைசி கூட்டத்தொடரில் முக்கியமான மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு அதனை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது, ஜனநாயகத்திற்கு விரோதமானது.

அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டு மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் அவர்களுக்கு புகட்டுவார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 29 -ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேர்தலில் இ.வி.எம் இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தியா கூட்டணியில் இதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதற்கு பேராதரவு அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, எங்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டை ஒத்தி வைத்துள்ளோம். ஜனவரி இறுதியில் அந்த மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். முதலமைச்சரை சந்தித்து தேதி வாங்கிய பின் எந்த தேதியில் நடைபெற இருக்கிறது என்பதை அறிவிப்போம். ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை கொடுக்கப்பட்டது தொடர்பாக சட்டரீதியாக அணுக திமுக தயாராகி வருகிறது. பொன்முடியும் மேல்முறையீடு செய்ய உள்ளார். பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதையற்றவர்கள். சிஏஜி அறிக்கையில் மெகா ஊழல் குறித்து வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகங்கள் பேசவில்லை. இதுவரை எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு மிக மோசமான ஊழல் நடைபெற்று உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கான ஊழல் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் திருமாவளவன்

ஆகவே, பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் ஊழல் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள் என்பதை பதிவு செய்து கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிவாரண நிதியை தான் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறார்கள். ஆனால், பாதிப்புகளுக்கு ஏற்ப கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை. அதை இந்திய ஒன்றிய அரசு பொருட்படுத்தவே இல்லை. கிட்டத்தட்ட ரூ.21,000 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை. வழக்கமாக வழங்க வேண்டிய நிதியை வழங்கி விட்டு, ‘நாங்கள் கரிசனம் உள்ளவர்கள்’ என்பதை போல் மத்திய அரசு காட்டிக் கொள்கிறது. குறிப்பாக, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தன்னை பிரதமராக நினைத்துக் கொண்டு பேசுவதைப் போல ஒரு தொனியை வெளிப்படுத்துகிறார். இது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இது போன்ற பேச்சுக்களின் மூலம் அவர் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.