சென்னை: விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் இருக்கையில் அமர்ந்து செல்லும் ஆர்ஏசி பயணிகளுக்கும் போர்வை, படுக்கை விரிப்பு, கம்பளி ஆகியவை வழங்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை:
விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட அனைத்து விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் இருக்கை வசதி பெற்று பயணிக்கும் ஆர்ஏசி பயணிகளுக்கும் போர்வை, படுக்கை விரிப்புகள், கம்பளி, தலையணை ஆகியவை கட்டாயம் வழங்க வேண்டும். இது சேர் கார் பயணிகளுக்கு பொருந்தாது.
கட்டணத்தில் வசூல்: ஆர்ஏசி பயணிக்கும் படுக்கை விரிப்புகள், போர்வைக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் வசூலிக்கப்படு கிறது. அவர்களுக்கு அந்த சலுகைகளை வழங்க வேண்டும். ஏசி பெட்டியில் படுக்கை வசதி பெற்ற பயணிகளுக்கு இணையாக ஆர்ஏசி பயணிகளுக்கும் படுக்கை விரிப்பு, போர்வை தலையணை வழங்க வேண்டும். இதை சரியாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பல்வேறு மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களின் ஏசி பெட்டிகளில் ஆர்ஏசி பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, போர்வை வழங்கப்படாமல் மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தீர்வு காணும் விதமாக, ஆர்ஏசி பயணிகளுக்கும் போர்வை, தலையணை, படுக்கை விரிப்புகள் வழங்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் குறுகிய தூரம் செல்லும் ஏசி சேர் கார் பெட்டிகளில் பயணிப்போருக்கு போர்வை, கம்பளி, படுக்கை விரிப்பு வழங்கப்படாது” என்றனர்.