கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்துக்கு கடந்த ஆக.5-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வந்தார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக அந்தக் கட்சியினர், கும்பகோணம் மகாமக குளக்கரைகளில் பிளக்ஸ் தட்டிகள் மற்றும் கொடிகளை கட்டியிருந்தனர். இதனை அறிந்த பாஜக மற்றும் இந்து அமைப்பினர், அங்குள்ள கொடிகளை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் சட்டம் – ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, கும்பகோணம் மேற்கு போலீஸார் உத்தரவிட்டதின் பேரில், அங்கு கட்டியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிளக்ஸ் மற்றும் கொடிகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், கும்பகோணத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பயணத்தையொட்டி, அவரை வரவேற்கும் விதமாக மகாமக குளக்கரைகளில் பாஜகவினர் பிளக்ஸ் மற்றும் கொடிகளைக் கட்டி வைத்திருந்தனர். இதனையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கா.செ.முல்லைவளவன் மற்றும் அந்தக் கட்சியினர், உடனடியாக அங்குள்ள கொடிகள் மற்றும் பிளக்ஸ் தட்டிகளை அகற்றாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீஸாரிடம் வலியுறுத்தினர்.
பின்னர் போலீஸார் உடனடியாக கொடிகளை அகற்ற வேண்டும் என பாஜகவினரிடம் கூறியதையடுத்து, அவர்கள், அங்குக் கட்டியிருந்த பிளக்ஸ் மற்றும் கொடிகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.