அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் 11 ஊர்களில் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார். மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, கும்பகோணம், சேலம், புதுச்சேரியைத் தொடர்ந்து… வேலூரில் நவம்பர் 24-ம் தேதி இப்போட்டி நடைபெற்றது.
வேலூர், காட்பாடி மற்றும் அருகேயுள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து பதின் வயதினரில் தொடங்கி 70 வயது முதியோர் வரை, ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, விருப்பமான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை அவர்கள் காட்சிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. 80-க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், விதிமுறைப்படி முதல் சுற்றுக்கு வீட்டிலிருந்தே வகை வகையாக சமைத்துக் கொண்டு வந்திருந்திருந்தனர்.
அரங்கம் கமகமக்க வஞ்சிரம் மீன் புட்டு, வொயிட் சிக்கன் கிரேவி, ஷெஸ்வான் சிக்கன், பள்ளிபாளையம் சிக்கன், செட்டிநாடு சிக்கன், அசத்தலான இறால் தொக்கு, நெத்திலி கருவாடு தொக்கு, காடை வறுவல், மட்டன் ஷமி கபாப், கயிறு கட்டி மட்டன் கோலா உருண்டை, ருமாலி ரொட்டி, சீரக சம்பா மட்டன் பிரியாணி, கொங்குநாடு மட்டன் வெள்ளை பிரியாணி மற்றும் குடும்பத்தில் வழி வழியாகப் பின்பற்றப்படும் கம்மஞ்சோறு, கம்பங்களி, சாமை மோர் களி, பழையக் கஞ்சி, சாமை அரிசிப் பொங்கல், நவதானிய தோசை, உருளைக்கிழங்கு அல்வா, வெற்றிலை லட்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு சோமாஸ், வெந்தயக்கீரை சப்பாத்தி, பருப்பு பாயாசம், காஞ்சிபுரம் இட்லி, சம்பா இட்லி, பலாக்காய் வால்நட் சட்னி, பைனாப்பிள் ரசம், பைனாப்பிள் அல்வா, பீட்ரூட் சேமியா அல்வா, கயிறு கட்டி சைவ கோலா உருண்டை, நாவூறும் சுவையிலான உக்காரை ஸ்வீட், பன்னீர் கோவா ஜாமுன், தேங்காய்ப்பால் வெஜ் பிரியாணி, ராகி ஃபலூடா மட்டுமின்றி கொள்ளுப் பொடி, தேங்காய் இட்லி பொடி, பூண்டு பருப்புப் பொடி ஆகியவையும் முக்கிய இடம் பிடித்தன.
ஆரோக்கிய நலன் குறித்த வாசகத்துடன் பிரண்டைத் துவையலையும் அருமையாகக் காட்சிப்படுத்தி அசத்தியிருந்தனர். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம், மூட்டு வலி சரியாகும் என்று உற்சாகமாக எடுத்துக் கூறினர். அதேபோன்று, முளைகட்டிய நவதானிய குருமாவும் இடம் பெற்றிருந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கான வரப்பிரசாதம், இந்த முளைகட்டிய நவதானிய குருமா. கிரிராஜ் என்ற 11 வயது சிறுவனும் போட்டியில் கலந்து கொண்டு தனது ரெசிப்பியைக் காட்சிப்படுத்திய முறை வாவ் சொல்ல வைத்தது.
‘‘ஆறாம் வகுப்புப் படிக்கிறேன். மரவள்ளி கிழங்கு அல்வா, சிவப்பு அரிசி கூழ், குதிரைவாலி அவல் உப்புமா செஞ்சிக் கொண்டுவந்திருக்கேன். எனக்கு சமையலில் இன்ட்ரஸ்ட் அதிகம்’’ என்று சிறுவன் கிரிராஜ் பேசியதும் கவனம் ஈர்த்தது.
இடையிடையே, அவள் விகடன் வாசகிகள் பலரும் மேடை ஏறி அவர்களின் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ‘‘அவள் விகடனில் முகம் தெரியாத தோழிகள் பலரும் சொல்லும் குறிப்புகள் எங்களுக்குப் பயனளிக்கின்றன. சமையல் டிப்ஸ், ஜோக்ஸ் மட்டுமின்றி மாடித்தோட்டம் அமைப்புக் குறித்தும் அவள் விகடனில் படித்து தெரிந்துகொண்ட பிறகுதான் எங்கள் வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறோம். தினமும் காலையில் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்வதில் மட்டுமே எங்களின் காலம் செல்கிறது. இந்த ஒருநாள் எங்களுக்கான நாளாகப் பார்க்கிறோம். நிறையக் கற்றுக்கொண்டோம். கொஞ்சம்கூட சோர்வடையவில்லை. அவள் விகடனுக்கு நன்றி’’ என்றனர் பேரன்புமிக்க மகிழ்ச்சியோடு. குடும்பமாக வந்திருந்ததால், குழந்தைகளையும் டான்ஸ் ஆட வைத்து குஷிப்படுத்தப்பட்டனர்.
போட்டியின் நடுவர் செஃப் தீனா பேசுகையில், ‘‘நான் 18 வருடங்களாக ஹோட்டல் இன்டஸ்டிரியலில் இருக்கிறேன். வீட்டில் சமைத்து சாப்பிடுவதே பெஸ்ட். வெங்காயம், கத்திரிக்காய், தக்காளி, வாழைக்காய் என இப்படி நான்கைந்துப் பொருள்கள் மட்டுமே வீட்டில் இருக்கும். அதை வைத்து, கொஞ்சமே கொஞ்சம் எண்ணெயை ஊற்றி சமைப்போம். உடலுக்கும் ஆரோக்கியம். ஆனால், இப்போதெல்லாம் சிறிய கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை சுவைக்காக என்னென்னமோ சேர்க்கிறார்கள். இது உடலுக்குக் கேடு. எனவே, அறுசுவை ஆரோக்கியத்துடன் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள்’’ என்று சிறந்த ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து, செஃப் தீனா உணவை ருசிபார்த்து மதிப்பெண் வழங்கினார். கடுமையான போட்டி நிலவிய முதல் சுற்றில் இருந்து சென்னையில் நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு அபிதா, மாலதி அண்ட் டீம் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 10 போட்டியாளர்கள் அன்று மதியம் நடந்த இரண்டாவது சுற்று ‘லைவ் குக்கிங்’ போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அதிலிருந்து பவித்ரா, குருராகவேந்திரா, ஜனனி ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப் பட்டவர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சோர்வைப் போக்கி புத்துணர்ச்சிப் பெற வைத்துவிட்டது போட்டி தினம்!