பாரிஸ், ஆள்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின்படி தரையிறக்கப்பட்ட தனியார் விமானத்தில் இருந்த தமிழர்கள் உட்பட, 275 இந்தியர்கள், பிரான்சின் பாரிசில் இருந்து நேற்று இரவு புறப்பட்டனர்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு, தனியார் விமானம் ஒன்று கடந்த 21ம் தேதி புறப்பட்டது.
ஐரோப்பிய நாடான ருமேனியாவைச் சேர்ந்த, ‘லெஜண்ட் ஏர்லைன்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் இயக்கும் இந்த விமானம், பிரான்சின் பாரிஸ் நகரம் அருகே உள்ள வாட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தில், 303 இந்தியர்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, தரையிறக்க உத்தரவிடப்பட்டது.
இந்த, 303 இந்தியர்களையும், சட்டவிரோதமாக அமெரிக்கா அல்லது வட அமெரிக்க நாடான கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளதாகவும், இது குறித்த தகவல் கிடைத்து, பாரிஸ் போலீசார், அந்த விமானத்தை தரையிறக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, பாரிஸ் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள், விமான நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பயணியரிடம் அவர்கள் நடத்திய விசாரணைக்குப் பின், அந்த விமானத்தை இந்தியாவுக்கு அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த நான்கு நாட்களாக விமான நிலையத்திலேயே பயணியர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நேற்று காலையில், வாட்ரி விமான நிலையத்தில் இருந்து மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என, கூறப்பட்டது. ஆனால், சில இந்தியர்கள், நாடு திரும்புவதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் குழப்பம் ஏற்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுக்குப் பின், 275 இந்தியர்கள் நேற்று இரவு, வாட்ரி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
போலீசார் மற்றும் நீதிபதிகள் நடத்திய விசாரணையின்போது, இவர்களில் பலர் தமிழிலும், மற்ற சிலர் ஹிந்தியிலும் பேசியதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், 26 பேர் தங்களுக்கு அடைக்கலம் அளிக்கக் கோரி பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அது ஏற்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
இதைத் தவிர, சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பேர் வெளியேற, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
பிரான்சில் இருந்து புறப்படும் விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று, அங்கிருந்து மும்பைக்கு வந்து சேரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில், 21 மாதக் குழந்தை மற்றும் பெற்றோர் துணையில்லாமல் வந்த 11 சிறுவர்களும் அடங்குவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்