உத்தர கன்னடா: ”அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது ஹிந்து நாடாக மாற்றுவதன் முதல் படி. முதல்வர் சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால், இந்தியா, ஹிந்து நாடாக மாறுவதை தடுக்கட்டும்,” என பா.ஜ., – எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே சவால் விடுத்தார்.
‘கர்நாடகாவில், கல்வி நிறுவனங்களில் மாணவியர், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தை மறைக்கும் ஆடை அணிய விதிக்கப்பட்டுள்ள தடை வாபஸ் பெறப்படும்’ என, முதல்வர் சித்தராமையா இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தார்.
இதற்கு, ஹிந்து அமைப்பினர், மடாதிபதிகள், பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், முதல்வர், நேற்று முன்தினம் தன் முடிவை மாற்றினார். இது குறித்து, உத்தர கன்னடா பா.ஜ., – எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே, சிர்சியில் நேற்று கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது ஹிந்து நாடாக மாற்றுவதன் முதல் படி. இது எங்களுக்கு நுாறாண்டுகளின் கொண்டாட்டம். ஆனால், கர்நாடகாவில் ‘ஹிஜாப்’ பின்னால் ஓடும் காங்கிரஸ் அரசு தான் உள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லாமல் காங்கிரஸ் வாழ முடியாது.
காங்கிரஸ் ஆரம்பத்தில் இருந்து, பெரும்பான்மையினருடன் அரசியல் செய்யவில்லை. முதல்வர் சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால், இந்தியா, ஹிந்து நாடாக மாறுவதை தடுக்கட்டும்.
சீருடை திட்டத்தை விட்டு, வேண்டியபடி அணியலாம் என்பது சரியில்லை. இத்தகைய ஹிந்து விரோத அரசு, கர்நாடகாவில் நீண்ட நாட்கள் இருக்க முடியாது.
கர்நாடகத்தை பாரம்பரிய ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தொந்தரவு செய்தவர் திப்பு சுல்தான். அவரது பெயரில் தான் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. எதிர்காலத்தில் மக்களே தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவி சால்வை போராட்டம்
”ஒரு வேளை ஹிஜாப் அணிய அனுமதி வழங்கினால், காவி சால்வை அணிந்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும்படி நானே மாணவர்களுக்கு சொல்வேன்,” என விஜயபுரா பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கலபுரகியில் நேற்று தெரிவித்தார்.இதற்கிடையில், மாநில முழுதும் பல்வேறு ஹிந்து அமைப்பினர் காவி சால்வை அணிந்து, நேற்று போராட்டம் நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்