தாவணகெரே : காங்கிரஸ் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு, வீரசைவ லிங்காயத் மாநாட்டில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன், காந்த்ராஜ் கமிட்டியை அப்போதைய முதல்வர் சித்தராமையா அமைத்தார். இந்த கமிட்டி கணக்கெடுப்பு நடத்தி, அறிக்கை தயார் செய்தது.
இந்த அறிக்கையை, அதன்பின் வந்த முதல்வர்கள் பெற்று கொள்ளவில்லை. தற்போது மீண்டும் சித்தராமையா ஆட்சி அமைந்துள்ளதால், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அறிக்கை வெளியாவதற்கு முன்னரே, சில விஷயங்கள் கசிந்து விட்டதால், ஒக்கலிகா சங்கம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கிடையில், தாவணகெரேவில், நேற்று 24வது வீரசைவ லிங்காயத் மாநாடு நடந்தது. முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அச்சமுதாய சர்வதேச தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான சாமனுார் சிவசங்கரப்பா தலைமை வகித்தார்.
இதில், ‘தற்போதைய விவாத பொருளாக இருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பழமையானது. அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே, அதன் விஷயங்கள் கசிந்தன.
இது தொடர்பாக, காந்தராஜு கமிஷன் அறிக்கையை ஏற்காமல், ஜாதிவாரி கணக்கெடுப்பை, அறிவியல் பூர்வமாக நடத்த வேண்டும் என்று அரசு ஒருமனதாக கோருகிறது’ என்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தாவணகெரேவில் நேற்று கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு, கர்நாடகாவின் இரண்டு பிரபல சமுதாயங்களான ஒக்கலிகா, லிங்காயத்துகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது விவேகமற்றது என்கின்றனர். அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; புதிதாக ஆய்வு செய்ய வேண்டும்.
ஜாதிவாரி அறிக்கை, முறைப்படி நடக்கவில்லை என்ற உணர்வு, அனைவரின் மனதில் உள்ளது. எனக்கும் அதே கருத்து உள்ளது. எனவே முறைப்படி ஆய்வு நடத்தி, உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு நேர்மையாக முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்