உலகம் முழுக்க 2023-ஆம் ஆண்டில் நம்மைப் பரபரப்பாக்கிய, அதிர்வலைகளை ஏற்படுத்திய‘டாப் 11’ சம்பவங்களை இங்கே ரீவைண்ட் செய்து பார்க்கலாம். நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர், சர்வதேச அளவில் கவனம் பெற்றது முதல் துருக்கி – சிரியா இயற்கைப் பேரழிவுகளைக் சந்தித்தது வரை பலவும் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. அவற்றின் தொகுப்பு.
துருக்கி – சிரியா பூகம்பம்: கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாடுகளை உலுக்கிப் போட்டன. இது ரிக்டர் அளவில் 7.8 மற்றும் 7.5 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி மக்களை பதைபதைக்க வைத்தன. 1000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அங்கு இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தன. நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதேபோல் அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கின. மீட்பு பணிகளில் ராணுவம் களமிறங்கி இரவும், பகலுமாய் மக்களை மீட்டன. இதையொட்டி துருக்கியில் 50,000-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 8,000 பேரும் இறந்ததாகக் கூறப்படுகிறது. துருக்கியில் இதற்கு முன் 1999-ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. அந்த நிலநடுக்கம் காரணமாக 17,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு நிதியுதவி செய்தனர்.
அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஹோட்டல்கள், பள்ளிகள், மால் வளாகம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடருகின்றன. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய 72-வயது முதியவரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் பல உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மெய்ன் நகரில் லூயிஸ்டன் எனும் பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்க துப்பாக்கி வன்முறைகள் தொடர்பான ஆவணக் காப்பகக் குறிப்பின்படி 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் மட்டுமே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 25,198 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 118 பேர் வீதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 170 பேர் குழந்தைகள் 879 பேர் பதின்ம வயதினர் ஆவர். இந்த 25 ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டவர்களாவர். 2023 தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் வரை சராசரியாக நாளொன்றுக்கு 66 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
COP28: காலநிலை உச்சி மாநாடு – காலநிலை மாற்றம் உலகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் ஐ.நா சார்பில் காலநிலை மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடுதான் COP என்று அழைக்கப்படுகிறது. COP28 எனும் பருவநிலை மாற்றம் குறித்த 28-வது உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றது. நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற்றது. இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் கலந்து கொண்டனர். புவி வெப்ப நிலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவது குறித்து ஆராய்வதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான பல முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டது. மிக முக்கியமான மாநாடாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான COP33 உச்சி மாநாட்டை 2028-ம் ஆண்டு நடத்த இந்தியா தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது சர்சதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
எக்ஸ் -`X’ பெயர் மாற்றம்: உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் அக்டோபர் 27-ஆம் தேதி 2022 அன்று ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதன்பிறகு 2023-ல் அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், கருத்து சுதந்திரத்தை மேம்படுத்தவும் பல அதிரடி முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பிறகு ஜூலை 2023-இல், மஸ்க் ட்விட்டரை ’எக்ஸ் -X’ என்று பெயர் மாற்றம் செய்தார். அதோடு அதன் லோகோவையும் மாற்றினார். அதன் தொடர்ச்சியாக பல உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். தலைமை நிர்வாக செயல் அதிகாரியை மாற்றினார். கடந்த ஏப்ரல் மாதம் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை ட்விட்டர் தளத்தின் லோகோவாக மஸ்க் மாற்றி இருந்தார். பின்னர் மீண்டும் நீலக் குருவியாக அதனை மாற்றினார். தற்போது ‘எக்ஸ்’ (X) என மாற்றியுள்ளார் மஸ்க். அவர் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக மாறியது முதலே பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவது கவனிக்கத்தக்கது.
சீனாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா: மக்கள் தொகை எண்ணிக்கையில் இதுவரை சீனா முதலிடம் வகித்துவந்தது. தற்போது, இந்தியா முதலிடத்துக்கு நகர்ந்துள்ளது. ‘வேர்ல்டு பாப்புலேஷன் ரிவியூ’ (World Population Review) அமைப்பின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.78 கோடியாகவும். சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகவும் உள்ளது. சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் 1970-களில் தொடங்கியது.1979-ல்தான் உலகெங்கிலும் ‘ஒற்றைக் குழந்தைத் திட்டம்’ (one-child policy) அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சீனா ஒற்றைக் குழந்தைத் திட்டத்தை 2016-ல் தான் தளர்த்தியது. எல்லோரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது கண்டிப்பாக ஒரு சிக்கல்தான் என வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சந்திரயான் 3 – நிலவில் கால்பதித்தது இந்தியா: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதி அருகே கால் பதித்த முதல் நாடு இந்தியா. அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியனுக்குப் பின்னால் நிலவை அடைந்த நான்காவது நாடு இதுவாகும். இது உலகளவில் விண்வெளி ஆய்வில் சமநிலையை மறுவடிவமைக்கும் இந்தியாவின் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் என்ற விஞ்ஞானி. இவர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ல் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், நிலவில் தரையிறங்க முடியாமல் பின்னடைவை சந்தித்தது. அதற்கான காரணங்கள் தீவிரமாக ஆராயப்பட்டன. இதையடுத்து, லேண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உலக நாடுகள் எவ்வளவோ முயன்றும், தற்போது வரை இங்கு நிரந்தர அமைதி சாத்தியமாகவில்லை. அதிகார வர்கங்களின் பசிக்கு அப்பவாவி மக்களை இரையாக்கி வருகின்றனர். டிசம்பர் 12 அன்று காசாவில் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால் அதற்கெல்லாம் இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை. பின்னர் ஒரு வழியாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமானது. இஸ்ரேலும், ஹமாஸ் படையும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை விடுக்க ஒப்புக்கொண்டன.
கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஹமாஸ்-இஸ்ரேல் போரில், காசா மீதான இஸ்ரேலிய போர் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 20,400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் பலியாகியிருக்கின்றனர். இஸ்ரேல் போரில் குழந்தைகளும், பெண்களும் அதிகமாக கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உலக அரங்கத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. போர் நிறுத்தம் என்பது இஸ்ரேல், ஹமாஸிடம் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிவருவது கவனிக்கத்தக்கது.
ஜி20 மாநாடு: ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக ஜி20 மாநாடு நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகளை, கடந்த சில மாதங்களாக மத்திய அரசு செய்துவந்தது. டெல்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபம் மாநாட்டுக்காகத் தேர்வுசெய்யப்பட்டது. அந்த மாநாட்டில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் உட்பட ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் ஜி20 ஆலோசனைக் கூட்டங்களில் முதன்முறையாக பல முக்கிய தலைப்புகள் முன்னிறுத்தப்பட்டன. பேரிடர்களில் குறைந்த தாக்கம், சிறுதானிய முக்கியத்துவம், சைபர் பாதுகாப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பாரம்பரிய மருத்துவத்தின் வளர்ச்சி உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. உலகத் தலைவர்களே மெச்சும் அளவுக்கு இந்த மாநாடு நடைபெற்றது. இது மாதிரியான நடவடிக்கைகள் இந்தியாவை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
கனடா- இந்தியா உறவு: கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதனாலேயே கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கப்பல் விபத்து: டைட்டானிக் கப்பல் உலக அளவில் இன்று வரை மிகப் பிரபலமானதாகக் கருதப்படுகிறது. டைட்டானிக் கப்பல் குறித்த ஆராய்ச்சிகளும், ஆவலும் இன்றுவரை நீடிக்கிறது. நீர்மூழ்கிக் கப்பல் மூலம் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் செல்வதும் இன்றளவும் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்தச் சூழலில், ஜூன் அன்று டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண கனடாவில் இருந்து கடலுக்குள் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமானது. கனடா, அமெரிக்க கடலோர காவல்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் இரவுப்பகலாக ஈடுபட்டனர்.ஆனால் நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்தது.
ஃப்ரெடி சூறாவளி: கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ஃப்ரெடி Cyclone Freddy என்ற சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். 1,400 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்திய இந்த சூறாவளி, தீவிர வெப்பமண்டல சூறாவளி என்று கூறப்படுகிறது.